Friday 30 December 2016

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த இன்று கடைசி நாள்

பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற மத்திய அரசு அறிவித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இன்று மாலை 4 மணிக்கு மேல் பழைய நோட்டுகளை வங்கிகளில் செலுத்த முடியாது.
நாடு முழுவதும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு நீக்கம் செய்யப் படுவதாக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்றும் தெரிவித்தார். நவம்பர் 10-ம் தேதி முதல் வங்கிகளில் பழைய நோட்டுகளை பெற்றுக் கொண்டு, புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரை வழங்கப்பட்டன. மேலும் பழைய நோட்டுகளை மருத்துவமனைகள், உள்ளாட்சி மற்றும் குடிநீர் வரி வசூல் மையங்கள், பெட்ரோல் நிலையங்கள் ஆகியவற்றில் செலுத்துவதற்கான அவகாசம், கடந்த 15-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
வங்கிகள், ஏடிஎம்களில் பணம் எடுக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெரும் பாலான ஏடிஎம்கள் மூடியே கிடப்பதால் மக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். புதிய ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டுகள் போதிய அளவு இருப்பில் உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும் வங்கிகளுக்கும் ஏடிஎம்களில் நிரப்பவும் போதிய அளவு புதிய நோட்டுகளை ரிசர்வ் வங்கி விநியோகிக்கவில்லை.
பழைய நோட்டுகளை வங்கியில் ரூ.5 ஆயிரம் வரை மட்டுமே செலுத்த முடியும் என்று கடந்த டிசம்பர் 20-ல் அறிவித்த மத்திய அரசு, பின்னர் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றது. இந்நிலையில் பழைய நோட்டுகளை வங்கிகளில் செலுத்துவதற்கான காலக்கெடு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.
இது தொடர்பாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவர் டி.தாமஸ் பிராங்கோ கூறும்போது, ‘‘வங்கிகளுக்கு பணம் கொடுப்பதை செவ்வாய்க்கிழமையே ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது. வங்கியில் டெபாசிட் செய்யப்படும் பணத்தை மட்டுமே இரு நாட்களாக வழங்கி வருகிறோம். பழைய நோட்டுகளை வங்கியில் செலுத்த இன்றே கடைசி. இன்று மாலை 4 மணிக்குமேல் பழைய நோட்டுகளை வாங்கக் கூடாது என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது’’ என்றார்.

No comments:

Post a Comment