Friday 14 August 2015

15 ஆண்டுகளில் இல்லாத வகையில் முடங்கிய நாடாளுமன்றம்

உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் நாடாளுமன்றம், சுமுகமாகச் செயல்பட முடியாமல் முடங்கிய மோசமான அனுபவத்தை தற்போது எதிர்கொண்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அவலத்தை நாடாளுமன்றம் சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 மக்களவை கூட்டத்தொடரை நடத்த நாளொன்றுக்கு ரூ. 7 கோடி முதல் ரூ. 9 கோடியும் மாநிலங்களவையை நடத்த சுமார் ரூ. 6 கோடி முதல் ரூ. 7 கோடியும் செலவாகிறது. அந்த வகையில், அலுவல்களின்றி முடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரால், மக்கள் வரிப்பணம் சுமார் ரூ. 250 கோடி வீணாகியுள்ளது. 
 கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை மொத்தம் 17 அமர்வுகளைக் கொண்டதாக மக்களவை, மாநிலங்களவை மழைக்காலக் கூட்டத்தொடர் அலுவல்கள் நடைபெற்றுள்ளன. 
 ஒரு மசோதாகூட நிறைவேறவில்லை: மாநிலங்களவையில் இந்தக் கூட்டத்தொடரில் 9 சதவீத அலுவல்களும், மக்களவையில் ஆளும் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இருந்ததால் அதன் உறுப்பினர்கள் ஆதரவுடன் கடைசி வாரத்தில் 48 சதவீத அலுவல்களும் நடந்துள்ளதை அவற்றின் செயலகங்கள் பதிவு செய்துள்ளன. 
 மாநிலங்களவையில் இரண்டு சதவீத கேள்விகளுக்கும், மக்களவையில் 13 சதவீத கேள்விகளுக்கும் மட்டுமே துறை அமைச்சர்களால் பதில் அளிக்கப்பட்டுள்ளது. வருத்தம் அளிக்கும் வகையில், மாநிலங்களவையில் இந்த முறை ஒரு மசோதாகூட நிறைவேறவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா கொண்டுவந்த மரண தண்டனைக்கு எதிரான மசோதா உள்பட ஆறு தனிநபர் மசோதாக்கள் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
 காட்சி மாறவில்லை: 2010, 2013 ஆண்டுகளில் நடந்த மாநிலங்களவை குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசும், எதிர்க்கட்சியாக இருந்த பாஜகவும் அமளியில் ஈடுபட்டதால் கேள்வி நேர அலுவல்கள் முழுமையாக வீணாகின. இப்போது அந்த இரு கட்சிகளின் இடம் மாறியுள்ளதே தவிர காட்சிகள் மாறவில்லை. 
 இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு உத்தேசித்திருந்தது. ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட தில்லி உயர் நீதிமன்ற சட்டத் திருத்த மசோதாவை மட்டுமே மக்களவையில் நிறைவேற்ற மத்திய அரசால் முடிந்தது. இது தவிர, மேலும் 5 மசோதாக்கள் மக்களவையில் மட்டும் நிறைவேற்றப்பட்டன.
 2001-ஆம் ஆண்டில் 110 சதவீத அலுவல்களை மக்களவை சந்தித்தது. அதன் பிறகு அதன் அலுவல்கள் இறங்குமுகமாகவே உள்ளன. இதன் தொடர்ச்சியாக ஒரு மசோதாகூட நிறைவேறாத நிலையை 2010-இல் நடந்த மக்களவை எதிர்கொண்டது. அதன் பிறகு இப்போதுதான் மோசமான நிலையை நாடாளுமன்றம் சந்தித்துள்ளது. 
 உறுப்பினர்கள் இடைநீக்கத்தில் சாதனை! 2013-இல் நடைபெற்ற மக்களவை மழைக்காலக் கூட்டத்தொடரில் 12 உறுப்பினர்களும், அதே ஆண்டு குளிர்காலக் கூட்டத்தொடரில் 17 உறுப்பினர்களும் அலுவலுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி இடைநீக்கம் செய்யப்பட்டனர். அந்த எண்ணிக்கையை விஞ்சும் அளவுக்கு இந்த முறை 25 உறுப்பினர்களை ஐந்து நாள்களுக்கு மக்களவைத் தலைவர் இடைநீக்கம் செய்தார். 
 விவசாயிகள் தற்கொலை, நீடித்த வளர்ச்சி, லலித் மோடி விவகாரம் தொடர்பாக மொத்தம் ஐந்து மணி நேரத்துக்கு இரு அவைகளிலும் விவாதம் நடந்துள்ளது. ஆனால், இவை அன்றாட அலுவல்களில் பட்டியலிடப்படவில்லை. 
 சம்பந்தப்பட்டவர்கள், அரசியலுக்காக இந்த விவகாரங்களை விவாதிக்கக் காட்டிய ஆர்வத்தை, முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் காட்டியிருந்தால், நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு பயன்படுத்தப்படும் வரிப்பணத்துக்கு அர்த்தம் இருந்திருக்கும் என்பதே சாமானிய மக்களின் யதார்த்த உணர்வாகும்.
 — கூட்டத் தொடரில் மொத்த அமர்வுகள் 17 
 — மக்களவைக்கு ஒரு நாள் செலவு ரூ. 7 கோடி- ரூ. 9 கோடி
 — மாநிலங்களவைக்கு ஒரு நாள் செலவு ரூ. 6 கோடி- ரூ. 7 கோடி
 — நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்ட மசோதாக்கள் 16
 — மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா 6
 — இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் 25

No comments:

Post a Comment