Tuesday 18 August 2015

இந்தியாவில் 1 ட்ரில்லியன் டாலர்கள் முதலீடு சாத்தியமே: அமீரக முதலீட்டாளர்களிடம் மோடி உறுதி

அமீரக முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி. | படம்: பிஐபி

ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முதலீட்டாளர்களை சந்தித்து இந்தியாவின் முதலீட்டுச் சாதக சூழ்நிலைகளை விளக்கினார்.
பிரதமர் மோடியின் பயணத்தின் முக்கிய அங்கமான முதலீட்டாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் இந்தியாவை அமீரகம் நீண்டகால முதலீட்டு பிரதேசமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
800 பில்லியன் டாலர்களை தன்னகத்தே கொண்ட அபுதாபி முதலீட்டு ஆணையத்தை இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ரியல் எஸ்டேட், துறைமுக வளர்ச்சி, மற்றும் ரயில்வே ஆகியவற்றில் முதலீடு செய்ய இந்தியாவின் விருப்பத்தை பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், உடனடியாக 1 ட்ரில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய முடியும் என்றும், அதற்குச் சாதகமான சூழ்நிலைகள் இந்தியாவில் உள்ளது என்றும், இது குறித்த அமீர்க முதலீட்டாளர்களின் கவலைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
உலக நிதி அமைப்புகளான ஐஎம்எப், உலக வங்கி உள்ளிட்டவை இந்தியாவின் வளர்ச்சி ஆதாரங்கள் குறித்து நம்பிக்கைக்குரிய கணிப்புகளை வெளியிட்டுள்ளது என்று பிரதமர் மோடி முதலீட்டாளர்களிடன் தெரிவித்தார்.
மேலும் பிரதமர் பேசும்போது, "இந்தியா வாய்ப்புகளுக்கான நாடு, 125 கோடி இந்திய மக்கள் என்பது சந்தை மட்டுமல்ல, பெரும்பலத்தின் ஆதாரம். எங்களுக்கு தொழில்நுட்பம், வேகம், தரமான கட்டுமானங்கள் தேவை. இதோடு குறைந்த விலை கட்டுமான வசதிகளும் எங்களுக்கு முக முக்கியமானது.
இந்தியாவின் வளர்ச்சி ஆதாரங்களும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பலம் இரண்டும் சேர்ந்து இந்த நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டாகச் செய்ய முடியும். இந்தியாவில் 7 ஆண்டுகளில் 5 கோடி குறைந்த விலை வீடுகளைக் கட்ட திட்டமிட்டுள்ளோம்.
மேலும், சுற்றுலா என்ற பிரதேசத்தின் வருவாய் ஆதாரங்களை இந்தியா இன்னமும் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. உணவு விடுதிகள், உட்பட பலவற்றுக்கு இந்தியாவில் பெரும் வாய்ப்புகள் உள்ளன.
கடந்த ஆட்சியின் மந்தத் தன்மை, தீர்மானமின்மை ஆகியவற்றால் தடைபட்டுப்போன திட்டங்களை மீண்டும் தொடங்க முன்னுரிமை அளிக்க முடிவெடுத்துள்ளோம்.
அமீரக தொழிலதிபர்களுக்கு இந்தியாவில் ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய துறைகள் பெரிய முதலீட்டு வாய்ப்புகளை அளிக்கும், வேளாண் துறையில் எங்களுக்கு குளிர்பதன வசதி உள்ள கிட்டங்கிகள் தேவைப்படுகிறது. இந்த இடத்திலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலீடு இந்தியாவுக்கு அவசியம் என்று உணரப்படுகிறது.
தற்போது இந்தியாவில் தீர்மானமான நிலையான ஆட்சி அமைந்துள்ளது, எனவே 34 ஆண்டுகால பற்றாக்குறையை ஈடுகட்டி விட முடியும் என்றே கருதுகிறேன்" என்றார் பிரதமர் மோடி.

No comments:

Post a Comment