Tuesday 4 August 2015

திருவாரூரில் உலக தாய்ப்பால் வார விழா


திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலகத் தாய்ப்பால் வார விழாவையொட்டி திங்கள்கிழமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆட்சியர் எம். மதிவாணன் பேசியது: குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. குழந்தையின் குடல் முதிர்ச்சிக்கு உதவுகிறது. மஞ்சள் காமாலை நோய் வராமல் பாதுகாக்கிறது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு புத்திக்கூர்மை அதிகமாக இருக்கும். தாய்ப்பால், முதிர்ந்த வயதில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
தாய் அடுத்து கர்ப்பம் தரித்தலை தாமதப்படுத்துவதுடன் உடல் பருமனை சீராக வைத்து கொள்ள உதவுகிறது. தாய்க்கு மார்பக மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் வராமல் பாதுகாப்பு அளிக்கிறது. குழந்தை பிறந்த முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 6 மாதங்களுக்கு பிறகு தாய்ப்பாலோடு சேர்த்து இணை உணவு 2 வயது வரை கொடுக்க வேண்டும். தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப சரியான விகிதத்தில் உள்ளன. முக்கியமாக, மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து வைட்டமின் - ஏ,சி, இரும்புச்சத்து தேவையான அளவு உள்ளது. இறை வழிபாடு போன்று தாய்ப்பால் கொடுப்பது உணர்வு பூர்வமானது. நிம்மதி கொடுப்பது, குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவது ஒவ்வொரு தாய்க்கும் கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் என்றார் மதிவாணன்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம், கோட்டாட்சியர் முத்துமீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment