Tuesday 4 August 2015

857 ஆபாச இணையதளங்கள் முடக்கம்


நாடு முழுவதும் இயங்கி வரும் 857 ஆபாச இணையதளங்களை முடக்குமாறு இணையதளச் சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 அரசின் இந்தச் செயலானது, மக்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதாக உள்ளது என எதிர்ப்பு எழுந்துள்ளது.
 இந்தியாவில் ஆபாச இணையதளங்களை முடக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
 இந்த மனு தொடர்பாக மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டிருந்தது. 
 அதற்கு, ஆபாச இணையதளங்களை முடக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு கடந்த ஜூலை 8-ஆம் தேதி தெரிவித்தது.
 ஆனால், அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாததால், மத்திய அரசின் மீதான அதிருப்தியை உச்ச நீதிமன்றம் அண்மையில் பதிவு செய்தது.
 இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இயங்கி வரும் 857 ஆபாச இணையதளங்களை முதல்கட்டமாக முடக்குமாறு இணையதளச் சேவை நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
 இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
 இது ஒரு தாற்காலிக நடவடிக்கை ஆகும். உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு வரும் வரையிலேயே இந்த நடவடிக்கை அமலில் இருக்கும். 
 ஆபாச இணையதளங்களை முடக்கக் கோரும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 இது சற்று சிக்கலான விவகாரம் ஆகும். இதில் அரசு தன்னிச்சையாக இறுதி முடிவு எடுக்காது. தொண்டு நிறுவனங்கள், பெற்றோர் நலச் சங்கங்கள், குழந்தை ஆலோசகர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளைக் கேட்டப் பின்னரே இதுதொடர்பாக அரசு இறுதி முடிவெடுக்கும். 
 அதேபோல், இந்த விவகாரத்தில் மக்களின் கருத்துகளைக் கேட்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
 ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் இந்தக் கருத்துகேட்புக் குழுவை அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது என அந்த அதிகாரி தெரிவித்தார்.
 இந்த நிலையில், மத்திய அரசின் இந்தச் செயல்பாட்டுக்கு சில தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 தலிபான் ஆட்சி... மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது, நாட்டில் தலிபான் ஆட்சியை ஏற்படுத்துவது போல் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தேவ்ரா தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 தனிப்பட்ட உரிமை என்பது அனைவருக்கும் உண்டு. அரசின் இந்தச் செயலானது அந்த உரிமைகளை நீர்த்துப்போகச் செய்வதாக உள்ளது. 
 இதற்கு அடுத்ததாக, தொலைக்காட்சிகளுக்கும், தொலைபேசிகளுக்கும் அரசு தடைவிதித்தால் கூட அது ஆச்சரியப்படத் தக்கதல்ல என்றார் அவர்.
 தவறான முடிவு: ""எந்த விஷயம் தடை செய்யப்படுகிறதோ அது எதிர்காலத்தில் பூதாகரமாக வெடிக்கும் என்பதை வரலாறு நமக்கு தெளிவுப்படுத்தியுள்ளது. அதேபோல், தனிமனித உரிமை மீதான அரசின் இந்த அடக்குமுறை, சமூக முன்னேற்றத்துக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்'' என திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment