Saturday 8 August 2015

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் ஆதார் எண்: மத்திய அரசு முடிவு


வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், பிற நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கும் ஆதார் எண் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
 இதுகுறித்து மக்களவையில் வெள்ளிக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
 வெளிநாடுவாழ் இந்தியர்கள், பிற நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் உள்பட இந்திய மண்ணைச் சேர்ந்த அனைவருக்கும் ஆதார் எண் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 இந்தப் பணிகளைச் செய்து முடிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
 பாகிஸ்தான் நிறுவனத்துக்கு அனுமதி: இதனிடையே, அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு இந்தியாவில் வர்த்தகம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் கூறியதாவது: இறக்குமதி செய்யப்பட்ட தரை விரிப்புகளை இந்தியாவில் வர்த்தகம் செய்ய அனுமதி கோரி பாகிஸ்தானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து அன்னிய முதலீடுகள் ஊக்குவிப்பு வாரியம், அதற்கு கடந்த ஏப்ரலில் ஒப்புதல் வழங்கியது. அலுமினியப் பொருள்கள் மீதான சுங்க வரி தொடர்பாக இந்திய அலுமினிய சங்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றார் அவர்.
 சர்க்கரை ஏற்றுமதி: ஏற்றுமதி தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், அமெரிக்காவுக்கு 8,000 டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 கடந்த மாதம் 21-ஆம் தேதி வரை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 6,101 டன்னும், அமெரிக்காவுக்கு 8,071 டன்னும் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பியூர் டயட் இந்தியா, சுமிந்தர் இந்தியா ஆர்கானிக்ஸ், ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் உள்பட பல்வேறு நிறுவனங்கள் அந்நாடுகளுக்கு சர்க்கரையை ஏற்றுமதி செய்து வருகின்றன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 
 

No comments:

Post a Comment