Saturday 1 August 2015

கலாம் பெயரில் தமிழக அரசு விருது: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு


குடியரசு முன்னாள் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாமின் பெயரில் தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், அவரது பிறந்த தினமானது இளைஞர் எழுச்சி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் ஆசிரியராக இருப்பதையே பெரிதும் விரும்பினார். இளைய தலைமுறையினரையும், மாணவர்களையும் தனது பேச்சாலும், கருத்துகளாலும் கவர்ந்தார். வாழ்வின் உன்னத நிலையை அடையவும், இந்தியாவின் வளர்ச்சிக்குச் சிறந்த பங்காற்றவும் உந்துசக்தியாக அவர் விளங்கினார்.
 எனவே, அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15-ஆம் தேதி, இளைஞர் எழுச்சி நாளாக தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும்.
 சுதந்திர தினத்தன்று விருது: வலிமையான பாரதம், வளமையான தமிழகம் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே எனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. 
 இதற்கு வலுவூட்டும் வகையில்,அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் வகையில், டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் விருது என்ற விருது ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படும்.
 இந்த விருது, விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணாக்கர் நலன் ஆகியவற்றுக்குப் பாடுபட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படும். இந்த விருதைப் பெறுபவருக்கு 8 கிராம் தங்கத்தால் ஆன பதக்கம், ரூ. 5 லட்சம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியன வழங்கப்படும். இந்த விருது இந்த ஆண்டு (2015) முதல் அளிக்கப்படும்.
 தமிழகம் பெற்றெடுத்த தலைமகன்: இந்தியாவின் ஏவுகணை நாயகன், அணுசக்தி நாயகன், தலைசிறந்த விஞ்ஞானி, திருக்குறள் வழி நடந்தவர் என பன்முகத் தன்மை கொண்டவராக அப்துல் கலாம் விளங்கினார். ராமேசுவரத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர், கடின உழைப்பாலும், ஒருமுகச் சிந்தனையாலும், விடா முயற்சியாலும் சிறந்த விஞ்ஞானியாகத் திகழ்ந்தார். அனைத்துத் தரப்பு மக்களாலும் போற்றப்படும் குடியரசுத் தலைவராகவும் விளங்கினார். குடியரசுத் தலைவராக இருந்தபோதும், அதன் பிறகும் அவரது சிந்தனை எப்போதும் மாணவர்கள், இளைஞர்கள் பற்றியே இருந்தது. 
 2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாக வேண்டும் என்று கனவு கண்டவர். மாணவர்கள், இளைஞர்களால் அந்தக் கனவை நனவாக்க முடியும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் என்று தனது அறிவிப்பில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment