Monday 10 August 2015

ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார் பிரதமர் மோடி: ஆகஸ்ட் 16 முதல் இரு நாள்கள் பயணம்


ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 16ஆம் தேதி முதல் இரு நாள்கள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
 அப்போது அந்நாட்டுத் தலைவர்களுடன் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
 இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
 பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரகம் சுற்றுப்பயணத்தை பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் உள்ளது. இருப்பினும், வரும் 16, 17ஆகிய தேதிகளில், பிரதமர் மோடி அந்நாட்டில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். அப்போது, முதலில் அபுதாபிக்கும், அதன்பிறகு துபைக்கும் அவர் செல்லவுள்ளார். அவரது இந்தப் பயணத்தின்மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார, கலாசார, சமுக உறவுகள் மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, கடந்த 1981ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அதன்பிறகு, 34 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். மத்திய அரசிடம் இருக்கும் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் இருந்து அதிக அளவு இறக்குமதி செய்யும் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் 2ஆவது இடத்தில் உள்ளது. இதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டினரில் இந்தியர்கள்தான் அதிக அளவு உள்ளனர்.
 பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தின்போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய மக்களைச் சந்தித்துப் பேசவுள்ளார் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வருகைதரவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, துபை கிரிக்கெட் மைதானத்தில் அங்கு வாழும் இந்திய சமூகத்தினர் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அங்கு வாழும் இந்திய சமூக நல அமைப்பு வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்காக ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக துபை கிரிக்கெட் மைதானத்துக்கு இந்தியர்களை அழைத்து வருவதற்காக அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள், துபை வணிக வளாகம், துபை இணையதள நகரம் ஆகியவற்றில் இருந்து போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment