Tuesday 25 August 2015

15 ஆண்டுகளாக தூர்வாரப்படாத கமலாலயக் குளம்


திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் வெள்ளோட்டமும், கும்பாபிஷேகமும் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், சுமார் 15 ஆண்டுகளாக தூர்வாரப்படாத கோயிலின் கமலாலயக் குளம் தூர்வாரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தின் பழைமையான கோயில்களில் ஒன்றான திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலுக்கென பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், தனிச்சிறப்பாக, ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் எனப்படுவது இக்கோயிலின் பிரம்மாண்டமான ஆழித்தேரே. திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை காண பல பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் இங்கு வந்து செல்வர்.
இக்கோயில் ஆழித்தேர் தேரோட்டம் கடந்த 16.7.2010-ல் நடைபெற்றது. பின்னர், 2.8.2010-ல் ஆழித்தேர் பிரிக்கப்பட்டது. புதிய தேர்க்கட்டும் பணி கடந்த 4 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று, தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் கடந்த 9.4.2001 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகமவிதிப்படி, 2013, ஏப்ரலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.
தமிழக அரசின் நடவடிக்கையால், தற்போது 26.10.2015 அன்று ஆழித்தேர் வெள்ளோட்டமும், 8.11.2015 அன்று கோயில் கும்பாபிஷேகமும் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இக்கோயிலும், ஆழித்தேரும் எவ்வளவு பெருமை வாய்ந்ததோ, அதேபோல், இக்கோயிலின் கமலாலயக் குளமும் வரலாற்று சிறப்பு மிக்கது. இக்குளத்தின் நடுவே நாகநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது மேலும் சிறப்புக்குரியது.
இத்தகைய சிறப்பு பெற்ற கமலாலயக் குளம் கடந்த 2000-ம் ஆண்டில் தூர்வாரப்பட்டு, நீர் நிரப்பப்பட்டது. அதன் பிறகு, சுமார் 15 ஆண்டுகளாக தூர்வாரப்படாமலேயே உள்ளது. நீர் வெளியேற்றும் பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதால் நீர் வெளியேற வழியின்றி குளத்தினுள்ளே தேங்கியுள்ளது.
குளத்துக்குள் பிளாஸ்டிக் பொருள்கள், காகிதங்கள் மற்றும் கழிவுப் பொருள்கள், கண்ணாடித் துண்டுகள், பழைய துணிகள் வீசப்பட்டுள்ளதால் நீர் மாசடைந்துள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள கோயில் கும்பாபிஷேகம், ஆழித்தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவர். அப்போது, புனிதக் குளமாக கருதப்படும் கமலாலயக் குளத்தில் குளித்து நீராடி, தியாகராஜரை வழிபடுவார்கள் என்பதால், கடந்த 15 ஆண்டுகளாக தூய்மைப்படுத்தப்படாமல் உள்ள கமலாலய குளத்தை விரைந்து தூர்வாரி, புதிய நீரை நிரப்ப வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment