Wednesday 19 August 2015

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவியும், நாட்டின் முதல் குடிமகளுமான சுவ்ரா முகர்ஜி காலமானார்.

 மூச்சுத் திணறல் உள்ளிட்ட காரணங்களுக்காக தில்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சுவ்ரா முகர்ஜி, கடந்த 7-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் கடந்த 11 நாள்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் செவ்வாய்க்கிழமை காலை 10.51 மணியளவில் காலமானார்.
 இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "நமது நாட்டின் முதல் குடிமகள் சுவ்ரா முகர்ஜி, செவ்வாய்க்கிழமை காலை காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். காலை 10.51 மணியளவில் அவர் நம்மை விட்டுப் பிரிந்து சென்றார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவ்ரா முகர்ஜியின் உடல், குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள ஏடிசி அறையில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தில்லி லோதி சாலையில் உள்ள தகன மேடையில் அவரது உடல் புதன்கிழமை (ஆக.19) தகனம் செய்யப்படவுள்ளது.
 வாழ்க்கைக் குறிப்பு: வங்கதேசத்தில் தற்போது இருக்கும் ஜெúஸார் நகரில் கடந்த 1940ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்தவர் சுவ்ரா முகர்ஜி. அவரது வயது 10ஆக இருந்தபோது, இந்தியாவுக்கு தனது குடும்பத்தினருடன் குடிபெயர்ந்தார். பட்டதாரியான அவர், ரவீந்திரநாத் தாகூரின் தீவிர ரசிகை ஆவார். ரவீந்திர சங்கீதப் பாடகராகவும், நடனம், ஒவியக் கலைஞராகவும் அவர் திகழ்ந்தார். ரவீந்திரநாத் தாகூர் மீதுள்ள மரியாதையின் காரணமாக, அவரது பெயரில் இசைக் குழுவை சுவ்ரா முகர்ஜி நடத்தினார். பிரணாப் முகர்ஜிக்கும், சுவ்ராவுக்கும் கடந்த 1957ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. பிரணாப் முகர்ஜி, சுவ்ரா முகர்ஜி தம்பதியருக்கு, அபிஜித் முகர்ஜி, இந்திரஜித் ஆகிய 2 மகன்களும், சர்மிஸ்டா என்ற மகளும் உள்ளனர். இவர்களில், அபிஜித் முகர்ஜி காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார்.
குடியரசு துணைத் தலைவர், பிரதமர் இரங்கல்
 சுவ்ரா முகர்ஜியின் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிகார் முதல்வர் நிதீஷ் குமார், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீது, அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய் உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள், பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரை வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், "சுவ்ரா முகர்ஜி மறைவு குறித்த செய்தியை கேள்விப்பட்டு வருத்தமுற்றேன். இந்தத் துயரமான நேரத்தில், எனது ஆழ்ந்த இரங்கலை குடியரசுத் தலைவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். பிரணாபைச் சந்தித்து இரங்கல் தெரிவிப்பதற்காக வங்க தேசப் பிரதமர் ஷேக் ஹசீனா புதன்கிழமை இந்தியா வரவுள்ளார்.
முதல்வர் இரங்கல்
  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மனைவி சுவ்ராவின் மறைவுக்கு, முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
 இது குறித்து அவர், பிரணாப் முகர்ஜிக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: 
 தங்களுடைய மனைவி சுவ்ரா முகர்ஜி திடீரென காலமான செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்துள்ளேன். இத்தகைய சூழ்நிலையில், ஆறுதல் சொல்ல போதிய வார்த்தைகள் இல்லை. ஆனாலும், தங்களுக்கும், தங்களுடைய குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதன் மூலம் தங்களுடைய துயரத்தில் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகிறேன். 
 இந்த துயரத்தை தாங்கும் சக்தியையும், மன வலிமையையும், தங்களுக்கு வழங்குவதோடு, தங்களுடைய மனைவியின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என தனது இரங்கல் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் இரங்கல்
 குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா முகர்ஜி மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 கருணாநிதி: பிரணாப் மனைவி மறைவு செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், அதிலிருந்து விடுபடாமலேயே மறைந்துவிட்டார். அவரை இழந்து வாடும் குடியரசுத் தலைவருக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
 விஜயகாந்த்: பிரணாப் முகர்ஜியின் உற்ற துணையாகவும், அரசியல் பயணத்தில் அவரோடு இணைந்து பணியாற்றியவரும், பல்வேறு சமூக நலத் தொண்டுகளைச் செய்தவருமான சுவ்ரா மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
 பொன்.ராதாகிருஷ்ணன்: இந்தியாவின் முதல் குடிமகள் என்ற பெருமைக்கும், சிறப்புக்கும் உரிய சுவ்ரா, தனது கணவரின் வளர்ச்சி அனைத்துக்கும் உற்ற உறுதுணையாய் இருந்து புகழ்பட வாழ்ந்தவர். அவரது மறைவு, ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
 தமிழிசை சௌந்தரராஜன்: மனைவியை இழந்து வாடும் குடியரசுத் தலைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாஜக சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்: இந்திய அரசியலில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று, தற்போது குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கையோடு நீண்ட காலம் பயணித்த அவர் மனைவியின் மரணம் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவர் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
 ஜி.கே.வாசன்: பிரணாப் முகர்ஜியின் அரசியல் மற்றும் பொதுவாழ்வில் அவரது உயர்வுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டவர் சுவ்ரா முகர்ஜி. எல்லோரிடமும் அன்பாகவும், எளிமையாகவும் பழகக்கூடியவர். அவர் மறைவு பிரணாப் முகர்ஜிக்கு பேரிழப்பாகும்.

No comments:

Post a Comment