Friday 21 August 2015

டெல்டாவில் பாறை எரிவாயு எடுக்கும் முயற்சியை தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்


காவிரி டெல்டா பகுதிகளில் பாறை எரிவாயு எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டுமென குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
வலங்கைமான் ஜி. சுந்தரமூர்த்தி: கண்டியூர், மாத்தூர் பகுதிகளில் முக்கிய பாசனக் கால்வாய்களில் வரும் நீர் கிளை கால்வாய்களில் தண்ணீர் செல்ல வழியின்றி அடைப்பு உள்ளதால், போர்க்கால அடிப்படையில் கால்வாய்களை தூர்வார வேண்டும். மீத்தேன் திட்டத்தையடுத்து விவசாயிகளை பெரிதும் அச்சுறுத்தும் வகையில் டெல்டாவில் பாறை எரிவாயுத் திட்டம் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
கங்களாஞ்சேரி சா.வி. ராமகிருஷ்ணன்: முறைவைத்து தண்ணீர் விடுவதில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறுவைத் தொகுப்புத் திட்டத்தை செப். 20-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்ய வேண்டும். காவிரி பகுதி விவசாயிகளுக்கு கோடை உழவு மானியம், அனைத்து விவசாயிகளுக்கும் டீசல் மானியம் வழங்க வேண்டும்.
பேரளம் வி. பாலகுமாரன்: நன்னிலம் ஒன்றியம் தேற்பாக்குடி பாசன வாய்க்கால் அகிலாம்பேட்டை, பொரசக்குடி, கோவிந்தச்சேரி, மேலமாங்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு பாசன வாய்க்காலாக உள்ளது. இவ்வாய்க்காலை தூர்வாராததால் தண்ணீர் செல்வதில் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, போர்க்கால அடிப்படையில் இவ்வாய்க்காலை தூர்வார வேண்டும்.
திருத்துறைப்பூண்டி ராமச்சந்திரன்: எங்கள் பகுதி கால்வாய்களை தூர்வாரி பாசனத்துக்கு சம்பா சாகுபடி பிரச்னையின்றி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உரம், விதை விலையில் வித்தியாசம் காணப்படுவதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
எடையூர் கோதண்டராமன்: சம்பா தெளிப்பு விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். எடையூர், வடபாதிமங்கலம் பகுதிகளில் வயல்களில் விழுந்து கிடக்கும் மின்கம்பிகள் மற்றும் மின்கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும்.
நீடாமங்கலம் சாத்தப்பன்: தோட்டக்கலை விவசாயிகளுக்கு சொட்டுநீர்ப் பாசன வசதி செய்து கொடுக்க வேண்டும். வங்கியில் கடன் பெற்ற விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்விக் கடன் வழங்க வங்கிகள் மறுக்கிறது. வங்கிகளின் இந்தச் செயல் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கூட்டத்தில் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் க. மயில்வாகனன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment