Thursday 6 August 2015

ரயில் தண்டவாளத்தில் இரும்புத் துண்டு

திருவாரூர் அருகே புதன்கிழமை ரயில் தண்டவாளத்தில் இரும்புத் துண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதால், விபத்து தவிர்க்கப்பட்டது.
திருவாரூர் - தஞ்சாவூர் ரயில் தடத்தில் புதன்கிழமை காலை 9.50 மணிக்கு எர்ணாகுளத்திலிருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயில் குளிக்கரை ரயில் நிலையத்தை கடந்து சென்றது. ரயில் சென்றதும் டிராக்மேன் கோபாலகிருஷ்ணன் குளிக்கரை ரயில் நிலையத்திலிருந்து திருவாரூர் நோக்கி தண்டவாளத்தை ஆய்வு செய்துகொண்டு வந்தபோது, தேவர்கண்டநல்லூர் என்ற ஊர் அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் தண்டவாளத்தில் எதையே வைத்துவிட்டு செல்வதை பார்த்து, அங்கு சென்று பார்த்தபோது, தண்டவாளத்தில் இரும்புத் துண்டுகள் இருப்பதை கண்டார்.
இதுகுறித்து திருவாரூர் ரயில்வே காவல் போலீஸார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
மேலும், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் இசட் ஆனி விஜயாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இரும்புத்துண்டு வைத்திருந்த தண்டாவளப் பகுதிக்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
இரும்புத் துண்டு வைக்கப்பட்டிருந்த தண்டவாளப் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக குறிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அரை அடி நீளத்தில் இரும்புத் துண்டு (ஸ்டீல் கீ) தண்டவாளத்தில் வைக்கப்பட்டு, அந்த இரும்புத் துண்டு தவறி விழுந்து விடாமல் ஆணியும், கருங்கற்கலும் வைக்கப்பட்டுள்ளது. இதை யாரும் விளையாட்டுத் தனமாக செய்ததாக கருதிவிட முடியாது. ஆய்வாளர் தலைமையில் இதுகுறித்து புலனாய்வு செய்ய குழு அமைக்கப்படும். யார் மீதாவது சந்தேகம் இருந்தால் பொதுமக்கள் ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார் அவர். எர்ணாகுளம் - காரைக்கால் ரயில் சென்ற பிறகு தண்டவாளத்தில் இந்த இரும்புத் துண்டுகள் வைக்கப்பட்டதால், அசம்பாதவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.

No comments:

Post a Comment