Saturday 15 August 2015

மோதலுக்கான களமல்ல நாடாளுமன்றம்



""நாடாளுமன்றம் விவாதம் நடைபெறும் களமாக அல்லாமல், மோதலுக்கான களமாக மாறி வருகிறது; ஜனநாயக அமைப்பான நாடாளுமன்றத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியைக் களைவதற்கான நடவடிக்கைகளை அரசியல் தலைவர்களும், அவர்கள் சார்ந்த கட்சிகளும் மேற்கொள்ள வேண்டும்'' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தினார்.
 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் எந்த அலுவல்களும் நடைபெறாமல் முடங்கிய சூழ்நிலையில், பிரணாப் முகர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்.
 நாட்டின் 69-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் ஆற்றிய உரையில் மேலும் கூறியதாவது:
 அரசியலமைப்பு அளித்த மிகப்பெரிய கொடை ஜனநாயகம். இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், நமது நாடாளுமன்றம் கட்டமைக்கப்பட்டுள்ளது. தற்போது நாடாளுமன்ற ஜனநாயகம் நெருக்கடியில் உள்ளது. நாடாளுமன்றம், விவாதம் நடைபெறும் களமாக அல்லாமல் மோதல் நடைபெறும் களமாக மாறிவிட்டது.
 ஜனநாயகத்தின் வேர்கள் மிகவும் ஆழமானவை; ஆனால், அவற்றின் இலைகள் வாடத் தொடங்கிவிட்டன. அவற்றுக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டிய தருணம் இதுவாகும்.
 சமூக நல்லிணக்கத்தைப் பொருத்தவரை, இந்திய ஜனநாயகம் ஆக்கப்பூர்வமானது. சகிப்புத்தன்மை, பொறுமை ஆகியவற்றின் மூலம் அதற்கு ஊட்டமளிக்க வேண்டும்.
 பல நூற்றாண்டுகளாக மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிக்க நடந்த முயற்சிகள், முறியடிக்கப்பட்டு விட்டன. மக்களுக்கும் அரசுக்கும் நாட்டின் அரசமைப்புச் சட்டம் புனிதமானதாக விளங்குகிறது. ஆனால், சட்டத்தை விட மனிதநேயமே இந்தச் சமூகத்துக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.
 "மனிதநேயம் ஒரு பெருங்கடல் போன்றது; அதில் சில துளிகள் நஞ்சு விழுந்தாலும், பெருங்கடல் முழுவதும் நஞ்சாகி விடாது. எனவே, நீங்கள் மனிதநேயத்தில் நம்பிக்கை இழக்கக் கூடாது' என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார்.
 ஆங்கிலேயர் காலத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கும், சவால்களுக்கும் இடையே, நமது கோட்பாடுகளை நமது முன்னோர்கள் காப்பாற்றினார்கள். ஒரு தேசம், அதன் கடந்த கால கோட்பாடுகளை மறந்தால், எதிர்காலத்துக்குரிய கோட்பாடுகளையும் இழந்துவிடும். ஒரு நாட்டின் வளர்ச்சியானது, சமூக மதிப்பீடுகளின் வலிமை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
 கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி, 2014-15-ஆம் நிதியாண்டில் 7.3 சதவீதத்தை எட்டியுள்ளது. எனினும், அதற்கான பலன்கள் செல்வந்தர்களை விட ஏழைகளை விரைவில் சென்றடைய வேண்டும்.
 கல்வி முறை: நமது கல்வி நிறுவனங்களின் தரம் கவலையளிக்கும் விதத்தில் உள்ளது. முன்னொரு காலத்தில் இருந்த குரு-சிஷ்ய முறையை நாம் நினைவுகூர வேண்டும். ஓர் ஆசிரியர், ஒரு மண்பாண்டக் கைவினைஞர் போல, தனது திறமைகளைப் பயன்படுத்தி மாணவர்களை உருவாக்க வேண்டும். ஆசிரியரின் தகுதிகளையும், திறமைகளையும் இந்த சமூகம் மதிப்பளித்து அங்கீகரிக்கிறது. ஆனால், நமது கல்வி முறையில் இன்று நடப்பது என்ன? ஆசிரியர்களும், மாணவர்களும், கல்வி நிறுவனங்களும் தங்களை சுயஆய்வு செய்துகொள்ள வேண்டும்.
 இயற்கையை மீறக்கூடாது: மனிதர்களுக்கும் இயற்கைக்குமான உறவு பாதுகாக்கப்பட வேண்டும். இயற்கையை மீறி செயல்படும்போதெல்லாம், மிகப்பெரிய அளவில் உயிரிழப்பும், பொருள் இழப்பும் ஏற்படுகிறது. 
 வெள்ள பாதிப்புகள் ஏற்படும்போது உடனடி நிவாரணம் தேவைப்படுகிறது. அதே நேரத்தில், தண்ணீர் தட்டுப்பாடு, வெள்ளம் ஆகியவற்றுக்கு நீண்ட கால தீர்வுகளையும் காண வேண்டும் என்று குடியரசுத் தலைவர் தனது உரையில் தெரிவித்தார்.
 "பயங்கரவாதிகளுக்கு அண்டை நாடுகள் இடம் கொடுக்கக் கூடாது'
 இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத சக்திகளை பயன்படுத்தவில்லை என்பதை அண்டை நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி கூறினார். அண்டை நாடான பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறினார்.
 அவர் மேலும் கூறியதாவது:
 நாம் அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் கரங்களை நீட்டும் வேளையில், வேண்டுமென்றே நமது பாதுகாப்பை சீர்குலைக்கும் செயல்களைக் கண்டு கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது. எல்லைகளுக்கு அப்பால் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்தியா இலக்காக உள்ளது. பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. பயங்கரவாதத்தைக் கருவியாக பயன்படுத்தும் முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதத்தை தூண்டும் சக்திகளுக்கு தக்க வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment