Sunday 30 August 2015

Malaysia - மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் விலகக் கோரி போராட்டம் தீவிரம்

நஜீப் ரசாக் பதவி விலக வலியுறுத்தி கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள். படம்: ஏஎப்பி

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி யுள்ள மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முதல் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு நிதியில் இருந்து நஜீப் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்குகளுக்கு 70 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 4,600 கோடி) மாற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ரசாக் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தபோதிலும் நாளுக்கு நாள் அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்நிலையில் ரசாக் பதவி விலகவும், நேர்மையாக தேர்தல் நடத்தவும் வலியுறுத்தி ‘பெர்ஸிஹ்’ என்ற அமைப்பு சார்பில் சனிக்கிழமை முதல் 2 நாள் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையொட்டி தலைநகர் கோலாலம்பூரில் நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு பிரதமருக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது. ஆனால் சுமார் 5000 பேர் திரண்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
கோலாலம்பூரில் உள்ள விடுதலைச் சதுக்கத்தை நோக்கிச் செல்ல போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலைச் சதுக்கத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மலேசிய அரசு பலப்படுத்தியுள்ளது.
போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனால் ராணுவம் தலையிடும் என்றும் நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப் படும் என்றும் ‘ஸ்டார் டெய்லி’ என்ற நாளேடு வியாழக்கிழமை தெரிவித்திருந்தது. ஆனால் இதுகுறித்து ராணுவம் பதில் அளிக்க மறுத்துவிட்டது.
இதனிடையே மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த மலேசிய அரசு அனுமதிக்க வேண்டும் என்று ஊழலுக்கு எதிரான சர்வதேச அமைப்பான ‘டிரான்ஸ்பரன்ஸி இன்டெர்நேஷனல்’ கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment