Saturday 29 August 2015

அகல ரெயில் பாதைக்கு ஏற்ப பிளாட்பாரங்களை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரம்




திருவாரூரில் அகல ரெயில் பாதைக்கு ஏற்ப பிளாட்பாரங்களை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அகலபாதை

திருவாரூரில் இருந்து காரைக்குடி வரையிலான ரெயில்வே வழித்தடத்தில் திருவாரூர்-பட்டுக்கோட்டை இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை மீட்டர் கேஜ் ரெயில்கள் இயங்கி வந்தன. இந்தியா முழுவதும் இருந்த மீட்டர் கேஜ் பாதைகள் அகல பாதையாக மாற்றப்பட்ட பின்னரும் திருவாரூர்- பட்டுக்கோட்டை இடையே மீட்டர்கேஜ் ரெயில் ஓடியது.

இந்த வழித்தடத்தை அகலபாதையாக மாற்றி திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை தஞ்சை, சென்னை போன்ற நகரங்களுடன் இணைப்பதற்கு ரெயில் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

ரெயில் போக்குவரத்து நிறுத்தம்

இதையடுத்து அகலபாதை அமைப்பதற்காக மீட்டர் கேஜ் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன்பின்னர் அகலபாதை திட்ட பணிகள் உடனடியாக தொடங்கவில்லை. இதனால் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இன்றளவும் ரெயில் வசதி இன்றி சிரமப்படுகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த ரெயில்வே பட்ஜெட்டில் திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி வரையிலான அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருவாரூர்-காரைக்குடி அகலபாதை பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. பட்டுக்கோட்டை முதல் காரைக்குடி வரையிலான பணிகள் 60 சதவீதம் முடிவடைந்து விட்ட நிலையில், திருவாரூர்-பட்டுக்கோட்டை இடையேயான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

பணிகள் தீவிரம்

திருவாரூர் ரெயில் நிலையத்தில் தற்போது 1, 2, 3-வது பிளாட்பாரங்களில் மட்டுமே அகல ரெயில் பாதை போக்குவரத்து நடைபெற்று வருகிறது. 4-வது, 5-வது பிளாட்பாரங்கள் மீட்டர்கேஜ் பாதைக்கு ஏற்ற வகையிலேயே இருந்தன. அகல ரெயில் பாதை போக்குவரத்து தொடங்க உள்ளதையொட்டி 4-வது, 5-வது பிளாட்பாரங்களை அகலபாதைக்கு ஏற்ப விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே திருவாரூரில் இருந்து காரைக்குடி வரை அகல ரெயில் பாதை அமைக்கும் பணியை 6 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிட்டு இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment