Tuesday 11 August 2015

நவ. 11-ல் தியாகராஜ சுவாமி கோயில் குடமுழுக்கு நடத்த முடிவு


திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் குடமுழுக்கை நவம்பர் 11-ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கோயில் குடமுழுக்கு தொடர்பான திருப்பணி -உபயதாரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை திருக்கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநில உணவு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் இரா. காமராஜ் தலைமை வகித்தார். கூட்டத்துக்கு அரசு கூடுதல் முதன்மைச் செயலர் ரா. கண்ணன். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி, ஆட்சியர் மா. மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கோயில் குடமுழுக்கு 2001-ம் ஆண்டில் நடைபெற்றது.
14 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், தற்போது கோயிலில் உபயதாரர்கள் மூலம் ரூ. 1.70 கோடியில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்து விரைவில் குடமுழுக்கு நடத்தப்படவுள்ளது. இக்கோயில் ஆழித்தேரின் தேரோட்டம் கடந்த 16.7.2010 அன்று நடைபெற்றது. தேர் பிரிக்கப்பட்டு ரூ. 2.15 கோடியில் திருப்பணிகள் வேலை நடைபெற்று, தற்போது 95% நிறைவடைந்த நிலையில் உள்ளது. குடமுழுக்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், பணிகளை துரிதப்படுத்தி, குறிப்பிட நாளுக்கு முன்பாகவே திருப்பணி வேலைகள் அனைத்தையும் நல்ல முறையில் முடிக்க வேண்டும் என்றார்.
இதன் பின்னர், திருப்பணி வேலைகள் மற்றும் சுதை மற்றும் வண்ணம் (பெயிண்டிங்) தீட்டும் வேலைகளை செய்து வரும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஸ்தபதி ஆகியோரின் கருத்துகளை அமைச்சர் கேட்டறிந்தார்.
மேலும், திருப்பணி தொடர்பாகவும், ஆழித்தேர் வெள்ளோட்டம் தொடர்பாகவும் அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் விரிவான அறிவுரைகளை அமைச்சர் வழங்கினார்.
ஆழித்தேர் வெள்ளோட்டத்தை அக்டோபர் 26-ல் நடத்துவது என்றும், திருக்கோயில் குடமுழுக்கை நவம்பர் 11-ல் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் அறநிலையத் துறை திருப்பணி கூடுதல் ஆணையர் மா. கவிதா, மத்திய தொல்óலியல் துறை நிபுணர் மூர்த்தீஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் டி.மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, இக்கோயிலில் நடைபெற்று வரும் நான்கு ராஜகோபுர திருப்பணி வேலைகள் மற்றும் 5 உள்நிலை கோபுரங்கள் மற்றும் அனைத்து சன்னதிகளிலும் நடைபெற்று வரும் திருப்பணி, தேர் சீரமைக்கும் பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

No comments:

Post a Comment