Monday 3 August 2015

கலாம் இறந்த 40 ஆவது நாளில் புதிய திட்டம் அறிவிக்கப்படும்: அறிவியல் ஆலோசகர் ஜெ.பொன்ராஜ் தகவல்


அப்துல் கலாம் இறந்த 40 ஆவது நாளில், அவரது லட்சியங்களை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எடுத்துச் செல்லும் வகையில், ஒரு புதிய திட்டம் அறிவிக்கப்படும் என, ராமேசுவரத்தில் கலாமின் அறிவியல் ஆலோசகர் ஜெ. பொன்ராஜ் சனிக்கிழமை தெரிவித்தார்.
அப்துல் கலாம் இறந்து 7 ஆம் நாள் நிகழ்ச்சி ராமேசுவரத்தில் அவரது வீட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கலந்து கொள்ள வந்த கலாமின் அறிவியல் ஆலோசகர் ஜெ. பொன்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடக்கும் கூட்டங்களை இரங்கல் கூட்டம் என்று கூறாமல், லட்சியக் கனவுகள் விதைப்புக் கூட்டம் என்று கூற வேண்டும். இன்னும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலாமுக்கு அஞ்சலி செலுத்துவற்காக ஏராளமானோர் ராமேசுவரம் வருகின்றனர். இதுதவிர மின்னஞ்சல் குறுந்தகவல்கள் மூலமாகவும் வரலாறு காணாத அளவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
கலாம் இறுதி அஞ்சலிக் கூட்டத்துக்கு உலக அளவில் இருந்து பலரும் வந்திருந்தமைக்கும் அவரது பிறந்த தினத்தை தமிழக அரசு இளைஞர் எழுச்சி நாளாக அறிவித்தமைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கலாமின் அண்ணன் மகன் ஷேக் சலீம் தலைமையில், ஒரு அமைப்பு ஏற்படுத்தி, கலாம் விட்டுச் சென்ற வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அந்த அமைப்புக்கு நான் வழிகாட்டியாக இருப்பேன்.
இந்தியா வல்லரசாக பாடுபட்ட கலாமின் லட்சியத்தை அவர் இறந்த 40 ஆவது நாளில் ஒரு புதிய திட்டம் அறிவிக்கப்படும். கலாம் நாட்டின் வளர்ச்சிக்காக 10 உறுதிமொழிகளை கொடுத்துள்ளார். அவை www.abdulkalam.com என்ற இணையதளத்தில் உள்ளன. அவற்றை தமிழிலும், ஆங்கிலத்திலும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு, அவரது சமாதி முன் பாக பதிக்கப்படும்.
புதுதில்லியில் அவர் வசித்து வந்த வீட்டை அறிவுசார் கண்டுபிடிப்புகளின் மையமாக ஆக்கிட வேண்டும். அந்த மையத்துக்கு வருவோரிடம் கலாம் நேரடியாக பேசுவது போன்று அமைக்க வேண்டும். அந்த வீட்டின் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. அவை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மாணவர்களுக்கு பயன்படக் கூடியவை.
அவருக்கென சொத்துகள் எதுவும் இல்லை. கலாமுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களும் நாட்டுடிள்ள 64 கோடி இளைஞர்களும்தான் அவரது சொத்துக்கள்.
ராமேசுவரத்தை பசுமையான நகராக மாற்றவும், அங்கு அதிநவீன மருத்துவமனை ஏற்படுத்தவும் விரும்பினார்.
ராமேசுவரம் முழுவதும் சோலார் விளக்குகளை ஏற்படுத்திட விரும்பினார். அவரது விருப்பத்தின்பேரில், மீனவக் குடியிருப்புகளுக்கு 32 சோலார் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
ராமேசுவரத்தில் அறிவியல் ஆராய்ச்சி மையத்தை நிறுவ வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவரது விருப்பங்களில் அதுவும் ஒன்றாக இருந்தது. தமிழக அரசு அவரது பிறந்த நாளை அறிவித்ததைப் போன்று மத்திய அரசு தேசிய எழுச்சி நாளாக அறிவிக்க வேண்டும் என்றார்.


No comments:

Post a Comment