Wednesday 12 August 2015

அரசு சலுகைகளுக்கு 'ஆதார்' கட்டாயம் அல்ல: உச்ச நீதிமன்றம்


அரசு சலுகைகளைப் பெற ஆதார் அட்டை சமர்ப்பிப்பது கட்டாயம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர், மண்ணெண்ணெய் மற்றும் பொது விநியோக திட்டத்தின் மூலம் சலுகைகளை பெறுவதற்கு மட்டும் ஆதார் அட்டையை அதுவும் ஒரு கட்டாயமற்ற அத்தாட்சியாக பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனவே, ஆதார் அட்டை அரசின் பிற நலத்திட்டங்களை பெற கட்டாயம் அல்ல என்பதை மத்திய அரசு அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வாயிலாக பரவலாக விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆதார் அட்டை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தும், ஆதார் அட்டைக்காக திரட்டப்படும் தகவல்கள் பல தனிநபர் உரிமையை அத்துமீறுவதாகவும் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
முன்னதாக இன்று (செவ்வாய்கிழமை) காலை விசாரணைக்கு வந்த இந்த வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்ய நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.
நீதிபதி சமலேஸ்வரர் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.போட், சி.நாகப்பன் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆதார் குறித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், மத்திய அரசுக்கு சில வழிகாட்டுதல்களை தெரிவித்தனர்.
"சமையல் எரிவாயு சிலிண்டர், மண்ணெண்ணெய் மற்றும் மற்றும் பொது விநியோக திட்டத்தின் மூலம் சலுகைகளை பெறுவதற்கு மட்டுமே ஆதார் அட்டையை பயன்படுத்தலாம். அதுவும்கூட கட்டாயமற்ற அத்தாட்சியாக பயன்படுத்தலாம்.
அரசின் மற்ற சலுகைகளை, நலத்திட்டங்களின் பயன்களைப் பெற ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியம் அல்ல.
ஆனால், ஆதார் அட்டை பணிக்கு இப்போதைக்கு இந்த நீதிமன்றம் இடைக்கால தடை ஏதும் விதிக்கவில்லை" என நீதிபதிகள் கூறினர்.
கைரேகை, கண்ணின் மணியின் தகவல்கள் ஆகியனவற்றை ஆதார் அட்டை திட்டத்துக்காக அரசு பதிவு செய்வதால் தனிநபர் உரிமை மீறப்படுகிறது என்ற புகார் தொடர்பாக கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், "ஆதார் அட்டைக்காக திரட்டப்படும் எந்த ஒரு தனிநபர் தகவலையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறாக பயன்படுத்தக் கூடாது" என உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment