Sunday, 9 October 2016

வடகிழக்கு பருவமழை: அக்.20-இல் தொடங்க வாய்ப்பு


வடகிழக்கு பருவமழை வரும் 20 -ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழைக் காலம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையாகும். இந்த ஆண்டைப் பொருத்தவரை தென்மேற்கு பருவமழையானது தென் மாநிலங்களை காட்டிலும் வட மாநிலங்களில் அதிக அளவு பெய்துள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் இருந்து படிப்படியாகக் குறையத் தொடங்கி, அக்டோபர் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காலம் முடிவடையும். அதன்பின்பு வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியது:
வடகிழக்கு பருவமழையானது பொதுவாக அக்டோபர் 20 -ஆம் தேதி தொடங்கும். இந்தத் தேதிக்கு 7 நாள்கள் முன்பாகவோ, 7 நாள்கள் பின்பாகவோ மழை தொடங்கலாம். ஒன்று அல்லது இரண்டு காரணிகளைக் கொண்டு, வடகிழக்கு பருவமழை தொடங்குவதை துல்லியமாகக் கணிக்க இயலாது.
பருவமழையின்போது இந்த ஆண்டு 2 அல்லது 3 புயல்கள் வங்கக் கடலில் உருவாக வாய்ப்புள்ளது. ஆனால் அந்தப் புயலானது இந்திய கடலோரங்களை குறிப்பாக தமிழகத்தை தாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். புயல் தொடர்பான கணிப்புகளை, அது உருவாகும் 10 நாள்களுக்கு முன்புதான் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த மழைப்பொழிவில் 50 சதவீதம் வடகிழக்கு பருவமழையின் மூலம் தான் கிடைக்கும். இந்த ஆண்டு பருவமழைக் காலத்தில் 3 மாதத்தில் 40 செ.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment