Wednesday, 12 October 2016

நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மத்தியக் குழு ஆய்வு

காவிரி நீர் பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட மத்திய தொழில்நுட்பக் குழுவினர் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை உறுதி செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மத்திய நீர் வள ஆணையத் தலைவர் ஜி.எஸ். ஜா தலைமையில், ஆணைய உறுப்பினர் மசூத் உசேன், கிருஷ்ணா- கோதாவரி அமைப்பு தலைமைப் பொறியாளர் ஆர்.கே. குப்தா ஆகியோரடங்கிய மத்தியக் குழுவினர், திங்கள்கிழமை பிற்பகல் நாகை மாவட்டம், கருங்கண்ணி, கிள்ளுக்குடி ஆகிய பகுதிகளில் வேளாண் விளை நிலங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளைச் சந்தித்தனர்.
தமிழக வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, பொதுப் பணித் துறை அரசு செயலாளர் பிரபாகரன், வேளாண் இயக்குநர் தெட்சிணாமூர்த்தி, நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி, நாகை தொகுதி மக்களவை உறுப்பினர் கே. கோபால், ஆகியோர் கடைமடை பகுதி வேளாண் பணிகள் எதிர்கொண்டுள்ள சவால்களை குழுவினரிடம் விளக்கினர்.
தமிழகத்தில் முப்போகம் சாகுபடி நடைபெற்று வந்த நிலையில், காவிரி நீர் பிரச்னை தொடங்கியதிலிருந்து 2 போக சாகுபடியாகக் குறைந்தது. தற்போது, கர்நாடக அரசு கடைப்பிடிக்கும் பிடிவாதம் காரணமாக, காவிரி கடைமடை பகுதிகளில் ஒரு போக சாகுபடி கூட உறுதியற்ற நிலைக்கு உள்ளாகியுள்ளது.
தற்போதைய நிலையில், வரும் 110 நாள்களுக்குத் தொடர்ந்து காவிரி நீர் கிடைக்காவிட்டால், நிகழாண்டும் சம்பா நெல் சாகுபடி பணிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாக நேரிடும் என அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில்... மத்திய உயர்நிலைத் தொழில்நுட்பக் குழுவினர் திங்கள்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தானில் நேரடி விதைப்பு செய்து தண்ணீரின்றி காயும் நிலங்களை குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளிடம் தற்போதைய சாகுபடி நிலவரம் குறித்து கேட்டறிந்தனர்.
டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை காப்பாற்ற உடனடியாக 25 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகத்திடமிருந்து பெற மத்திய உயர்நிலைத் தொழில்நுட்பக் குழு பரிந்துரைக்க வேண்டும். அத்துடன், டிசம்பர் மாதவாக்கில் சம்பா சாகுபடிக்கென காவிரியில் தண்ணீர் பெறவும் வழிவகை செய்ய வேண்டும். ஆண்டுதோறும் கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்குரிய தண்ணீரை பெறுவதற்கு நடத்தப்படும் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், தமிழக மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டையும் போக்கும் வகையில் மத்தியக் குழுவினர் எங்களின் நிலைப்பாட்டை நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment