வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக ஓடம்போக்கி ஆற்றை தூர்வார வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ள பாதிப்புகளை தடுத்திட தேவையான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. திருவாரூர், நன்னிலம், குடவாசல் மற்றும் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட திருவாரூர் வருவாய் கோட்டத்தில் உள்ள ஓடம்போக்கி ஆறு, வெண்ணாறு, சுள்ளான் ஆறு, வெட்டாறு உள்ளிட்ட பாசன ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
மருந்து பொருட்கள்
தூர்வாரும் பணிகளை கண்காணிக்க மண்டல அளவில் மாவட்ட அலுவலர்கள், உதவி கலெக்டர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர், நகராட்சி ஆணையர், பேருராட்சி செயல் அலுவலர் நியமிக்கப்பட்டு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை செய்து வருகிறன்றனர். ஆதலால் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக இந்த பணிகளை வெகு விரைவாக செய்து விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாம்பு கடி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தேவையான மருந்து பொருட்கள் இருப்பு வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், திருவாரூர் உதவி கலெக்டர் முத்துமீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment