Saturday, 1 October 2016

கர்நாடகம் தண்ணீர் திறக்கவும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மத்திய அரசு 3 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை 

தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு போதுமான தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு காவிரியில் கடந்த 21–ந் தேதியில் இருந்து 27–ந் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை அடுத்த ஆண்டு ஜனவரி 31–ந் தேதிக்கு பிறகு நடைமுறைப்படுத்தும்படி உத்தரவிடுமாறு கேட்டு கர்நாடக அரசு திருத்த மனு தாக்கல் செய்தது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு 

இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இடைக்கால மனு தாக்கல் செய்தது. அதில், ‘கடந்த 5, 12, 20–ந் தேதிகளில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு எதையும் கர்நாடகம் நடைமுறைப்படுத்தவில்லை என்றும், இது கோர்ட்டை அவமதிக்கும் செயல் என்பதால், காவிரி நீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றும் வரையில் கர்நாடகத்தின் எந்த திருத்தம் கோரும் மனுவையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது’ என்று கூறப்பட்டு இருந்தது.

 இந்த மனுக்களை கடந்த செவ்வாய்க்கிழமை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த பிரச்சினை தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகளை மத்திய அரசு அழைத்து பேசவேண்டும் என்று உத்தரவிட்டது.

டெல்லியில் பேச்சுவார்த்தை 

அதன்படி, மத்திய அரசு நேற்று டெல்லியில் இரு மாநில அரசுகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

மத்திய மந்திரி உமாபாரதி தமிழக, கர்நாடக மாநில அரசுகளுடன் நேற்று மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை.
 
சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை 

உமா பாரதி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை விவரங்களை மத்திய அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

காவிரி மேலாண்மை வாரியம்

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசு 3 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க   வேண்டும் என்று உத்தரவிட்டது.

அக்டோபர் 4-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவேண்டும். காவிரி பாயும் மாநிலங்களான தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தங்களது தரப்பு பிரதிநிதியை நாளை மாலை 4 மணிக்குள் அறிவிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.  

கர்நாடகாவிற்கு உத்தரவு

இன்றும் சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகா, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. காவிரியில் தமிழகத்திற்கு நாளை முதல் அக்டோபர் 6-ம் தேதி வரையில் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

கடந்த 27–ந் தேதியன்று காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது அப்போது மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இப்போது மூன்று நாட்களுக்குள் வாரியத்தை அமைக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

No comments:

Post a Comment