Saturday 15 October 2016

பொது சிவில் சட்டம்: முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் எதிர்ப்பு

பொது சிவில் சட்டத்தை குறித்த ஆலோசனைகள் பெறும் மத்திய சட்ட ஆணையத்தின் முயற்சிகளை அனைத்திந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

மத்திய அரசு ஒரு சமூகத்துக்கு எதிராக தொடுக்கும் போர் இது என்று முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து புதுடெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய பொதுச்செயலர் வாலி ரெஹ்மானி கூறும்போது, 'மக்களை ஒரே விதமாக சித்தரிக்க முயலும் இந்தப் பொது சிவில் சட்டம், நாட்டின் பன்முகத்துவம் மற்றும் கலாச்சார தனித்துவங்களுக்கு அச்சுறுத்தல்' என்று கண்டித்துள்ளார்.

“பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் அது அனைவரையும் ஒரே மாதிரியானவர்களாக காட்டும் முயற்சியாகும். இது நாட்டு நலனுக்கு நல்லதல்ல.
அதே போல் மூன்று முறை தலாக் கூறும் நடைமுறையை நீக்கவும் நாங்கள் விருமபவில்லை. பிற சமூகத்தினரிடையே அதிகமாக விவாகரத்துகள் நடைபெறுகின்றன. முஸ்லிம்களை விட இந்துக்களிடையே இருமடங்கு விவாகரத்துகள் அதிகமாக உள்ளன” என்று ஜமையது உலிமா-ஹிந்த் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி தெரிவித்தார்.

சில முஸ்லிம்கள் மூன்று முறை தலாக் கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களே என்று கேட்ட போது முஸ்லிம் சட்ட வாரிய பொதுச்செயலர் வாலி ரெஹ்மானி “ஜனநாயகத்தில் அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு” என்றார்.

“மத்திய அரசு தனது தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சி செய்கிறது. எனவே அரசு இந்த முயற்சியைக் கைவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பொது சிவில் சட்ட முயற்சிகளை கைவிடவில்லை எனில் எங்களது எதிர்கால நடவடிக்கைகள் என்ன என்பதை நாங்கள் முடிவெடுப்போம். இப்போதைக்கு முஸ்லிம் மக்களிடையே நாங்கள் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மை மக்கள், சமூகக் குழுக்கள், என்.ஜி.ஓ.க்கள், அரசியல் கட்சிகள், அரசு முகமைகள், ஆகியோரிடம் மத்திய சட்ட வாரியம் கேள்விகளை தயாரித்து அளித்து பொது சிவில் சட்டம் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு முறையிட்டுள்ளது. இந்த கேள்விகள் தொகுப்பில் மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்தல், பெண் குடிமக்களுக்கு சொத்துரிமை ஆகியவையும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment