சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இந்தியாவில் முதன்முறையாக கொடைக்கானல் மலைப் பகுதியில் ‘ஸ்கை வாக்’ அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. கொடைக்கானலில் 12 மைல் சுற்றுச் சாலையில் உள்ள சுற்றுலாத் தலங்களான மோயர் பாய்ன்ட், பைன் பாரஸ்ட், தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு என வரிசை யாக அமைந்து இயற்கையை ரசிக்க ஏற்றவையாக உள்ளன. இவற்றையும் கடந்து பிரை யண்ட் பூங்கா, ஏரியில் படகு சவாரி ஆகியவை உள்ளன.
சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறை ஆகியவை பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கொடைக்கானல் மலைப் பகுதியில் டால்பின்நோஸ் என்ற இடத்தில் ‘ஸ்கை வாக்’ திட்டத்தை வனத்துறை செயல்படுத்த உள்ளது.
மலைப் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் கண்ணாடி பாலம் அமைத்து சுற்றிலும் பாதுகாப்பாக கம்பிகள் அமைத்து சுற்றுலாப் பயணிகள் சிறிது தூரம் நடந்து செல்லும் வகையில் ஏற்படுத்துவதுதான் ‘ஸ்கை வாக்’. இதில் நடக்கும்போது சுற்றுலாப் பயணிகளுக்கு ‘த்ரில்’ அனுபவம் ஏற்படும். காரணம், கண்ணாடி பாலத்தின் மீது நடக்கும்போது கீழே பார்த்தால் அதளபாதளமாக பள்ளத்தாக்கு தெரியும். இதனால் நாம் கண்ணாடி மேல் நடந்தாலும் ஒருவித அச்ச உணர்வு நமக்கு ஏற்படும்.
இந்த சுற்றுலாத் தலங்கள் வெளிநாடுகளில் மலைப் பகுதி களில் மட்டுமே உள்ளன. இந்தியாவில் முதன்முறையாக கொடைக்கானலில் ‘ஸ்கை வாக்’ சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கொடைக்கானல் வனத்துறை அலுவலர் ஒருவர் கூறும்போது, “சுற்றுலாப் பயணிகளை கவர ‘ஸ்கை வாக்’ அமைப்பது குறித்து திட்டங்கள் தயாரித்துள்ளோம். இதை அமைப்பதற்கு நிதி எவ்வளவு செலவாகும் என்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். இத்திட்டத்தை தனியார் நிதியுதவியுடன் செயல்படுத்தவும் திட்டம் உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன் ‘ஸ்கை வாக்’ அமைக்கும் பணிகள் வெளிநாட்டு நிறுவன உதவியுடன் தொடங்கும்” என்றார்.
No comments:
Post a Comment