Saturday, 22 October 2016

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் வடக்குகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம்

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வு கூட்டம் 


திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அனைத்துறைகளின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுகூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார். உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக முதல் கட்டமாக 212 வெள்ளம் பாதிக்கும் இடங்களை கண்டறிந்து அந்த பகுதிகளை ஆய்வு செய்து தேவையான வெள்ள தடுப்புப்பணிகள் செய்திட வேண்டும். அதற்காக பல்வேறு குழுக்கள் மாவட்ட அளவிலும், வருவாய் கோட்ட அளவிலும், வட்ட அளவிலும், வட்ட அளவிலும் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையினை எதிர்நோக்கி உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால்கள் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் ஆகாயத்தாமரை மற்றும் காட்டாமணக்கு செடிகள் அகற்றப்பட்டு, தூர்வாரப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி உணவு பொருட்கள் வினியோகம் செய்ய போதுமான அளவு பொருட்கள் இருப்பு வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருந்து பொருட்கள் இருப்பு 


அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாம்பு கடி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தேவையான மருந்து பொருட்கள் இருப்பு வைக்க வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளும் கால்நடை மருத்துவமனைகளில் இருப்பு வைக்க வேண்டும். மேலும் விவசாய பெருமக்களுக்கு தேவையான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் இதுவரை 145.32 கி.மீ. தூரத்திற்கு வெள்ளநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டுள்ளது. 230.75 கி.மீ. கால்வாய்களும், பொதுப்பணித்துறை மூலம் ரூ.2 கோடியே 97 லட்சம் மதிப்பில் 286.65 கி.மீ. தொலைவிற்கு கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. மேலும் 3,160 பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. 93 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக 884 பள்ளிகள், 31 கல்லூரிகள் 2 சமுதாய கூடங்கள் மற்றும் 136 திருமண மண்டபங்கள் கண்டறியப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட சட்ட நடவடிக்கையினால் காவிரியில் தண்ணீர் வரப்பெற்று திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் சம்பா நேரடி விதை தெளிப்பு மற்றும் நடவு முறையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையினால் கிடைக்கும் மழை நீரை விவசாய பெருமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள ஏதுவாக மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தியாகராஜன், மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி அம்பிகாபதி, திருவாரூர் நகரசபைதலைவர் ரவிச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் மயில்வாகனன், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அழகிரிசாமி, உதவி கலெக்டர்கள் முத்துமீனாட்சி (திருவாரூர்), செல்வசுரபி (மன்னார்குடி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment