Saturday 12 December 2015

விமான நிலையத்தில் வெள்ளம்: ரூ. 1,000 கோடி நஷ்டம்

சென்னை விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால், விமான நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 சென்னையில் கடந்த மாதம் 30-ஆம் தேதி, டிசம்பர் 1-ஆம் தேதி பெய்த பெரு மழை, சென்னை விமான நிலையத்தை வெள்ளத்தில் மிதக்க வைத்தது. ஓடுபாதைகளில் மழை வெள்ளம் கரை புரண்டோடியதால் விமானங்கள் வருவதும், புறப்படுவதும் முடங்கியது. இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையம், 2-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை மூடப்பட்டது. 6-ஆம் தேதி பிற்பகல்தான் மீனம்பாக்கம் விமான நிலையம் செயல்பட தொடங்கியது.
 பல்லாவரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு விமான நிலையத்தையும் விட்டுவைக்கவில்லை. சில மணி நேரங்களில் வெள்ளநீர், சென்னை விமான நிலைய பகுதியை பெரிய குளம் போல மாற்றி விட்டது. அந்த சமயத்தில் சுமார் 20 விமானங்கள் அங்கு இருந்தன. அதில், சில விமானங்களை வெள்ளம் இழுத்து சென்றது. 2 பெரிய விமானங்களை இழுத்து சென்று வனப்பகுதிக்குள் புரட்டிப் போட்டது. ஓடு பாதையின் மையப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஓரிரு விமானங்கள் மட்டுமே தப்பின. மற்ற எல்லா விமானங்களும் வெள்ள நீரில் மிதந்தன. இதில், அவை கடுமையாக சேதம் அடைந்துள்ளன. சேதமடைந்த விமானங்களை சீரமைக்க பல கோடி செலவாகும் என்று தெரிகிறது.
 ரூ.1,000 கோடி இழப்பு: கடலோர காவல் படைக்கும் இந்த மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தின் ஒரு பகுதியில் கடலோர காவல் படைக்கு சொந்தமான விமானங்களும் ஹெலிகாப்டர்களும் நிறுத்தப்பட்டிருந்தன.
 இதில், 5 சிறு ரக விமானங்கள், 2 ஹெலிகாப்டர்களுக்குள் வெள்ளம் புகுந்தது. எனவே, இந்த 7 விமானங்களையும் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் சீரமைக்க குறைந்தபட்சம் ரூ.50 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
 சென்னை விமான நிலையத்துக்குள் புகுந்த வெள்ளத்தால் சுமார் 35 விமானங்கள் சேதமடைந்துள்ளன. தனியார் விமான நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான சேவை 5 நாட்கள் முடங்கியது. இதனால் விமான நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் வெள்ளம் முழுமையாக வடிந்து விட்டாலும் இன்னமும் 100 சதவீத இயல்பு நிலை திரும்பவில்லை.
 
 

No comments:

Post a Comment