Monday 14 December 2015

சவுதி உள்ளாட்சி தேர்தல்: முதல்முறையாக ஒரு பெண், கவுன்சிலராக தேர்வு



 

சவுதி உள்ளாட்சி தேர்தலில் முதல்முறையாக ஒரு பெண், கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். 

மன்னர் ஆட்சி நடக்கிற சவுதி அரேபியாவில் இதுவரை பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. பெண்கள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. பெண்கள் வாகனங்கள் ஓட்டவும் அனுமதி இல்லை. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் மன்னர் அப்துல்லா மரணம் அடைவதற்கு முன்பாக சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கவும் அவர் முடிவு எடுத்தார். அத்துடன், நாட்டின் மிகப்பெரிய ஆலோசனை அமைப்பான சுரா கவுன்சிலிலும் 30 பெண்களை நியமித்தார்.

இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள 2 ஆயிரத்து 100 உள்ளாட்சி கவுன்சில் இடங்களுக்கு நேற்று தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 1,050 இடங்களில் மன்னர் ஒப்புதலுடன் நியமனங்கள் செய்யப்படும். நேற்றைய தேர்தலில் 5 ஆயிரத்து 938 ஆண்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இவர்களுடன் 978 பெண்களும் வேட்பாளர்களாக களம் இறங்கினர்.

இது சவுதியில், மறைந்த மன்னர் அப்துல்லா மேற்கொண்ட அரசியல் சீர்திருத்தத்தின் மூலமாக ஏற்பட்டுள்ள வரலாற்று திருப்புமுனையாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவர தொடங்கியது. அதில், மெக்கா மாகாணத்தில், மெத்ரக்கா என்ற இடத்தில் சல்மா பிண்ட் ஹிஜாப் அல் ஒட்டேய்பி என்ற பெண் வெற்றி பெற்று கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏழு ஆண்களையும், 2 பெண்களையும் எதிர்த்து நின்று அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் எந்தவொரு ஆண் வாக்காளரையும் பெண் வேட்பாளர்கள் நேரில் சந்தித்து ஓட்டு கூட கேட்கமுடியாது என்ற சூழலில் அவர் இந்த வெற்றியை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment