Wednesday, 16 December 2015

வெள்ளத்தில் மூழ்கிய காந்தியின் வரலாற்று நூல்கள்-ஆவணங்கள்

சென்னையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, தியாகராய நகரில் உள்ள காந்தி கல்வி நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வரலாற்று நூல்கள், ஆவணங்கள் தண்ணீரில் மூழ்கி விட்டன. காந்தியக் கொள்கைகளைப் பரப்ப உதவும் வகையில், இந்த நூலகத்தைச் சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
சென்னை தியாகராய நகர் வெங்கட நாராயண சாலையில் உள்ள தக்கர் பாபா வித்யாலய வளாகத்தில் காந்தி கல்வி நிலையம் 1978-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதை தியாகி டி.டி.திருமலை நிறுவினார்.
இங்கு காந்தி தொடர்பான வரலாற்று ஆவணங்கள், அவர் தமிழகத்தில் 20 இடங்களில் நிகழ்த்திய சொற்பொழிவுகள், அவருடன் பழகியவர்கள் கூறிய தகவல்கள் அடங்கிய ஆவணங்கள், 10,000-க்கும் மேற்பட்ட நூல்கள், குறுந்தகடுகள் போன்றவை பராமரிக்கப்பட்டு வந்தன. இதனால், காந்தி குறித்து முழுமையாக அறிய விரும்புவோருக்கு தேவையான தகவல்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.
தொடரும் காந்திய பணிகள்: மேலும், நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு காந்தியின் கொள்கைகள், சிந்தனைகள், போராட்ட வரலாறு ஆகியவை குறித்த செய்திகளைக் கொண்டு செல்லுதல், அஞ்சல் மூலம் "காந்தியை அறிவோம்' என்ற திட்டத்தின் மூலம் தேர்வு நடத்தி சான்றிதழ்கள் வழங்குதல், சைக்கிள் பிரசாரம், திரைப்படங்கள், கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளை காந்தி கல்வி நிலையம் மேற்கொண்டு வருகிறது.
இங்கு முன்னாள் தேர்தல் அதிகாரிகள் டி.கே.ஓஜா, நரேஷ் குப்தா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் காந்தி குறித்த முதுநிலை படிப்பை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர்.
வெள்ளத்தில் சேதம்: இந்த நிலையில், சென்னையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக காந்தி கல்வி நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 90 சதவீத ஆவணங்கள், நூல்கள், பதிவேடுகள் போன்றவை தண்ணீரில் மூழ்கிவிட்டன. மேற்பகுதியில் இருந்த சில நூல்கள், ஆவணங்கள் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளன.
இழந்த ஆவணங்களை மீட்டுருவாக்கம் செய்யவும், நூலக கட்டடத்தை புதுப்பிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காந்தி கல்வி நிலைய நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
என்னென்ன ஆவணங்கள்? இதுகுறித்து காந்தி கல்வி நிலையத்தின் தலைவர் மோகன், கௌரவ இயக்குநர் அண்ணாமலை, செயலர் பாண்டியன் ஆகியோர் கூறியது:
இந்த நிலையத்தில் காந்தி குறித்து முதன் முதலாக 1909-இல் தென்னாப்பிரிக்கா எழுத்தாளர் ஜோசப் ஏ.டோக் எழுதிய வாழ்க்கை வரலாறு, 1919 முதல் 1948 வரை காந்தியடிகள் நடத்திய ஹரிஜன், யங் இந்தியா ஆகிய வார இதழ்களின் தொகுப்பு, 1910-இல் ஹெச்.எஸ்.எல்.போலக் எழுதிய எம்.கே.காந்தி சித்திரம், ஏ.கே.செட்டியார் 1952-இல் எழுதிய புண்ணியவான் காந்தி என்ற நூல், அமெரிக்க எழுத்தாளர்கள் ஹோரஸ் அலெக்ஸாண்டர், ஜூடித் எம்.பிரௌன் எழுதிய நூல்கள், எழுத்தாளரும், பதிப்பாளருமான ஜி.ஏ.நடேசன், கணேஷ் போன்றோர் பதிப்பித்த நூல்கள் என பொக்கிஷமாக விளங்கிய அரிய வகை ஆவணங்களைச் சேகரித்து வைத்திருந்தோம். இத்தகைய ஆவணங்களை இழந்ததை பேரிழப்பாகக் கருதுகிறோம். இந்த நூலகத்தை புதுப்பித்து, காந்தியின் வரலாறு குறித்த தகவல்களை மக்களுக்கு அளிக்க விரும்புகிறோம்.
இனி பேரிடர்களிலிருந்து இந்த ஆவணங்களைப் பாதுகாக்கும் வகையில் அனைத்து நூல்களையும் டிஜிட்டல் மயமாக்க திட்டமிட்டுள்ளோம். இதை மீண்டும் பொலிவு பெறச் செய்ய பொதுமக்களும், தமிழக அரசும் உதவ வேண்டும்.
அரிய ஆவணங்கள் இருந்தால்...: காந்தி பற்றிய அரிய ஆவணங்கள், செய்திகள், நூல்கள் இருந்தால் அவற்றை காந்தி கல்வி நிலையத்துக்கு நன்கொடையாக வழங்க அனைவரும் முன்வர வேண்டும். மென்பொருள் வடிவில் இருக்கும் நூல்களையும் வழங்கலாம்.
மேலும், நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு தங்களால் இயன்ற பணம், பொருள் சார்ந்த உதவிகளை அளிக்கலாம். இதற்காக ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ரூ.85,000 நிதி திரட்டப்பட்டுள்ளது. தகவல்களுக்கு 99529 52686, 94441 83198 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

No comments:

Post a Comment