Sunday 6 December 2015

திருவாரூர் மாவட்டத்தில் 6–வது நாளாக மழை: ஆறு–வாய்க்கால்கள் வேகமாக நிரம்புகின்றன



திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 6–வது நாளாக மழை பெய்தது. இதனால் ஆறு, வாய்க்கால்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. பயிர்களை வெள்ளம் சூழ்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
6–வது நாளாக மழைவடகிழக்கு பருவமழை தொடங்கிய நேரத்தில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் மிதமான அளவு மழை பெய்து வந்தது. கடந்த மாதம் (நவம்பர்) 8–ந்தேதிக்கு பிறகு மழை தீவிரம் அடைய தொடங்கியது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதால் திருவாரூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்ய தொடங்கிய மழை நேற்று 6–வது நாளாக நீடித்தது. தொடர் மழை காரணமாக கடந்த திங்கட்கிழமையும், புதன்கிழமையும் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து 6–வது நாளாக மழை பெய்ததால் நேற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
திருவாரூரில் நேற்றுமுன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது. நேற்று காலை 6 மணி அளவில் மழை தீவிரம் அடைந்து வெளுத்து வாங்கியது. அதேபோல மதிய வேளையிலும் பலத்த மழை பெய்தது. மாலை வரை விட்டு விட்டு பலத்த மழை பெய்தபடி இருந்தது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளான நன்னிலம், குடவாசல், மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், கூத்தாநல்லூர், கோட்டூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களிலும் நேற்று பரவலாக மழை பெய்தது.
விவசாயிகள் கவலைஇந்த ஆண்டு ஆற்றில் தண்ணீர் இல்லாததால் திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி அதிகமாக நடைபெறவில்லை. இதனை தொடர்ந்து அணை திறக்கப்பட்டு ஆற்றில் தண்ணீர் வந்ததால் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் செய்து வந்தனர்.
நடப்பாண்டில் சம்பா சாகுபடியில் திருந்திய நெல் சாகுபடி முறையில் 37 ஆயிரத்து 714 எக்டேரிலும், இயல்பான நடவு முறையில் 14 ஆயிரத்து 292 எக்டேரிலும், நேரடி நெல் விதைப்பு முறையில் இதுவரை 66 ஆயிரத்து 985 எக்டேரிலும் என மொத்தம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 991 எக்டேரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல 27 ஆயிரத்து 767 எக்டேரில் தாளடி நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. தொடக்கத்தில் மிதமாக பெய்த பருவ மழை பயிர்களுக்கு உதவியது.
ஆனால் படிப்படியாக அதிகரித்த மழையால் திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட 20 ஆயிரம் எக்டேர் வயல்களை மழை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. அதேநேரத்தில் ஆறு, வாய்க்கால்கள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி ஆறு, வாய்க்கால்களில் கரையை தொடுகிற அளவுக்கு வெள்ள ஓட்டம் இருக்கிறது. குளங்களும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தொடர்ந்து பெய்யும் மழையால் பயிர்கள் மூழ்கும் அபாயம் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மழை அளவுதிருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நன்னிலத்தில் 39 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டர் அளவுகளில்) வருமாறு:–
திருத்துறைப்பூண்டி–36, முத்துப்பேட்டை–32, குடவாசல்–29, திருவாரூர்–25, மன்னார்குடி–15, பாண்டவையாறு தலைப்பு–14, நீடாமங்கலம்–14, வலங்கைமான்–10. மொத்த மழை அளவு–213 மி.மீட்டர். சராசரி–24 மி.மீட்டர்.

No comments:

Post a Comment