Thursday 30 April 2015

அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்தால் கடும் நடவடிக்கை'


திருவாரூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைக்கக் கூடாது என்றார் ஆட்சியர் எம். மதிவாணன்.


ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் விளம்பர பதாகை வைக்க அனுமதி வழங்குவது குறித்த அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது:


நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் டிஜிட்டல் பிளக்ஸ் போர்டு, பேனர், தட்டி போர்டுகள் ஆகியவை தனியார் மற்றும் பொது இடங்களில் வைக்க கோட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.  தனிநபர், அரசு இடம் அல்லது கட்டடத்திலோ டிஜிட்டல் விளம்பர பதாகை, பேனர்கள் வைக்க 15 தினங்களுக்கு முன்பே வைக்கப்படும் இடத்தின் வரைபடம், வைக்க உத்தேசித்துள்ள தேதி எத்தனை தினங்கள் என்பதை குறிப்பிட்டு உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பத்துடன் பேனர், விளம்பரத் தட்டிகள் வைக்கப்படும் இடம் தனி நபர் இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட நபரிடம் சம்மதக் கடிதம் பெற்று இணைக்க வேண்டும். அரசு இடமாக இருந்தால் பேரூராட்சி, நகராட்சி உதவி செயற் பொறியாளர்களிடம் தடையில்லாச் சான்று பெற்று இணைக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அலுவலரிடம் 15 தினங்களுக்கு முன்பு தடையில்லாச் சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். சாலைகளை மறித்து பேனர் வைக்கக் கூடாது. ஒரு பேனருக்கும் மற்றொன்றிற்கும் 10 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், தெருக்கள், சாலை சந்திப்பு, சாலை ரவுண்டானாக்கள், முக்கிய சிலைகள், புராதன சின்னங்கள், சுற்றுலாத் தலங்கள் ஆகிய இடங்களில் பேனர்கள் வைப்பதற்கு அனுமதி இல்லை.


அனுமதி இல்லாமல் வைக்கும் பேனர்களை அகற்ற ஆகும் செலவினத்தை சம்பந்தப்பட்ட நபர்களிடம் பிடித்தம் செய்ய கோட்டாட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்று வைக்கப்படும் பேனர்கள் விதிமுறைகளுக்கு உட்படாமல் இருந்தால் அனுமதி ரத்து செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனுமதி பெறாமல் வைத்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டபூர்வமான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் மதிவாணன்.


 கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment