Friday, 3 April 2015

சட்டப் படிப்பு இடங்கள் இரு மடங்காக அதிகரிப்பு


விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இளநிலை பட்டப் படிப்புகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்த தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

மேலும், புதிதாக இரண்டு 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளையும் 2015-16-ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் காரணமாக, பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இளநிலை படிப்புகளில் இதுவரை இருந்துவரும் 320 சேர்க்கை இடங்கள், இப்போது 660-ஆக உயர உள்ளது.

இது குறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.வணங்காமுடி அளித்த பேட்டி:

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் இளநிலை சட்டப் படிப்புகள் மிகச் சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகின்றன.
இப்போது பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கான பி.எல். (ஹானர்ஸ்) படிப்பும், பிளஸ் 2 முடித்தவர்களுக்கான பி.ஏ.-எல்.எல்.பி., பி.காம்.- எல்.எல்.பி. என்ற ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வந்தது. கடந்த ஆண்டில் மிக அதிக அளவாக ஒரு இடத்துக்கு 10 பேர் வீதம் விண்ணப்பித்திருந்தனர். தேவை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வசதி குறைந்த மாணவர்களும் பயன்பெறும் வகையில், படிப்பு இடங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஆட்சி மன்றக் குழுவும் அனுமதி அளித்துவிட்டது.

இதன்மூலம், பி.எல். (ஹானர்ஸ்) படிப்பு இடங்கள் 80-லிருந்து 120-ஆகவும், பி.ஏ.- எல்.எல்.பி. படிப்பில் இருந்த 160 இடங்கள் 180-ஆகவும், பி.காம்.- எல்.எல்.பி. படிப்பில் இருந்த 80 இடங்கள் 120-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
நடைபெற உள்ள 2015-16-ஆம் கல்வியாண்டு கலந்தாய்வில், இந்தக் கூடுதல் இடங்களிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

2 புதிய படிப்புகள்: மேலும், இந்தியாவிலேயே முதன்முறையாக பி.சி.ஏ.- எல்.எல்.பி., பி.பி.ஏ.- எல்.எல்.பி. என்ற இரண்டு புதிய 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள், ஆற்றல்சார் பள்ளியில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
தலா 120 இடங்களைக் கொண்ட இந்தப் படிப்புகளிலும், 2015-16-ஆம் கல்வியாண்டுக் கலந்தாய்வில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றார் அவர்

No comments:

Post a Comment