Saturday 25 April 2015

சரக்கு - சேவை வரி (GST) மசோதா தாக்கல்



சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இந்த மசோதாவை தாக்கல் செய்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆற்றிய அறிமுக உரையில், "மத்திய அரசு, மாநில அரசுகள் அகிய இரு தரப்புக்கும் வெற்றி என்பதே இந்த மசோதாவின் நோக்கம்; இதில் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படாது என்பதால் யாரும் அச்சப்படத் தேவையில்லை' என்றார்.

இந்நிலையில், ஜிஎஸ்டி மசோதாவை விவாதத்துக்கு கொண்டு வரும் முன்பாக, அதை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அரசு இதை ஏற்கவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தை இடித்துத் தள்ளிவிட்டு, அரசு துரித கதியில் மசோதாவைக் கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

ஜிஎஸ்டி மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என அதிமுகவும், பிஜு ஜனதா தளமும் வலியுறுத்தின. ஆனால், அக்கட்சிகள் வெளிநடப்பு செய்யவில்லை.

ஜிஎஸ்டி மசோதா மிக முக்கியமான ஒன்று எனக் கூறி அதை அறிமுகம் செய்ய அனுமதியளித்த அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், அந்த மசோதா குறித்து அருண் ஜேட்லி அறிமுக உரையாற்றுவார் என்றும், விரிவான விவாதம் வேறொரு நாளில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, மசோதாவை அறிமுகம் செய்து வைத்து அருண் ஜேட்லி பேசியதாவது:

மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் வெற்றி என்பதை மையமாகக் கொண்டது ஜிஎஸ்டி மசோதா. இது நிறைவேறினால், சரக்கு மற்றும் சேவைகள் மீது மத்திய, மாநில அரசுகள் ஒரே நேரத்தில் வரி விதிப்பதற்கு அதிகாரம் கிடைக்கும்.

ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படக் கூடும் எனக் கூறுவது தவறு. இந்த மசோதா நிறைவேறினால், முதல் 3 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு 100 சதவீத இழப்பீடு வழங்கப்படும்.

அதற்கு அடுத்த ஆண்டு 75 சதவீதம், 5-ஆவது ஆண்டில் 50 சதவீதம் இழப்பீடாக வழங்கப்படும். அதற்கு அடுத்த ஆண்டில் இருந்து அனைவருக்கும் வருவாய் கிடைக்க ஆரம்பித்தவுடன் யாருக்கும் இழப்பீடு தேவைப்படாது.

மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் அமல்படுத்தப்பட்ட போது, இதேபோன்று முதல் 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. பின்னர் வருவாய் கிடைக்கத் தொடங்கியவுடன் எந்த மாநிலமும் இழப்பீடு கோரவில்லை.

காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டும்: முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் முன்னெடுக்கப்பட்ட ஜிஎஸ்டி மசோதாவை பாஜக அரசு தாக்கல் செய்திருப்பது குறித்து காங்கிரஸ் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஆனால், அந்த மசோதாவை நிறைவேற்றவிடாமல் காங்கிரஸ் ஏன் தாமதிக்கச் செய்கிறது? இந்த முரண்பாட்டைப் புரிந்து கொள்ள இயலவில்லை. தாங்கள் முன்னெடுத்த மசோதாக்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆதரவளிக்க வேண்டும்.

மாநிலங்களுக்கு அதிகாரம்: ஜிஎஸ்டி குழு அமைக்கப்பட்டால், அதில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை என்ற அளவில் மாநிலங்கள் இடம்பெறும். இதனால், நிராகரிப்புக்கான வீட்டோ அதிகாரம் மாநிலங்களுக்குக் கிடைக்கும். ஜிஎஸ்டி குழுவில், அனைத்து மாநிலங்களும் ஒன்றுபட்டால் மத்திய அரசின் முடிவுகளைக்கூட தடுக்க முடியும் என்றார் ஜேட்லி.

ஜிஎஸ்டி மசோதா நிறைவேறினால் தமிழகத்துக்கு ரூ.16,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று மக்களவை துணைத் தலைவரும், அதிமுக உறுப்பினருமான தம்பிதுரை தெரிவித்தார். ஆனால், ஒரு ரூபாய்கூட வருவாய் இழப்பு ஏற்படாது என்று ஜேட்லி கூறினார்.

முன்னதாக, ஜிஎஸ்டி மசோதா மக்களவையில் கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அதில் இடம் பெற்றிருந்த பெரும்பாலான அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தன. இதையெடுத்து, மீண்டும் அந்த மசோதா குறித்து அதிகாரம் அளிக்கப்பட்ட மாநில நிதியமைச்சர்கள் குழு ஆய்வு செய்தது.

இதன் தொடர்சியாக, ஜிஸ்டி அமலாக்கத்துக்கு வகை செய்யும் அரசியலமைப்பின் 122-ஆவது திருத்த மசோதாவை அருண் ஜேட்லி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

No comments:

Post a Comment