பள்ளிக்கூட மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியதாக பிளஸ்-2 தேர்வுகருதப்படுகிறது.
பிளஸ்-2 தேர்வு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 18-ந்தேதி முடிவடைந்தது. தற்போது டேட்டா சென்டரில் மதிப்பெண் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் எஸ்.எஸ். எல்.சி. தேர்வு மார்ச் 19-ந்தேதி முதல் ஏப்ரல் 10-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 20&ந்தேதி தொடங்கியது.
மே 7-ந்தேதி முடிவு
இந்தநிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவு மே 7-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு மே 21-ந்தேதியும் வெளியாகிறது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா
உத்தரவின்படி அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
கடந்த மார்ச் 5-ந்தேதி முதல் மார்ச் 31&ந்தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே மாதம் 7-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மே 21-ல்எஸ்.எஸ்.எல்.சி. முடிவு
கடந்த மார்ச் 19-ந்தேதி முதல் ஏப்ரல் 10-ந்தேதி வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே மாதம் 21-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மாணவ-மாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
www.tnr-esults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
கலெக்டர் அலுவலகங்கள்
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளிக்கூட மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கூடங்களிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கு.தேவராஜன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்வு முடிவு வெளியான பிறகு விரைவில் தற்காலிக சான்று (புரவிஷனல் சர்டிபிகேட்) இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
இந்த ஆண்டில் பிளஸ்-2 தேர்வு முடிவும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவும் கடந்த ஆண்டை விட 2 நாட்களுக்கு முன்னதாக வெளியாகின்றன.
No comments:
Post a Comment