முஸ்லிம்களின் மனக்குறைகளை தீர்க்க தனது முழு ஆதரவை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமருடன் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியை நாடு முழுவதிலும் இருந்து வந்த முஸ்லிம் மத தலைவர்களும், மதகுருக்களும் நேற்று சந்தித்து பேசினர். இந்த பிரதிநிதிகள் குழுவில், சென்னை தாஜ்புரா ஷரீப்பைச் சேர்ந்த சையது அலி அக்பரும் இடம்பெற்றிருந்தார்.
அந்த குழுவினர், முஸ்லிம்களின் பல்வேறு பிரச்சினைகளை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தனர். முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள், மசூதிகள், மதரசாக்கள் ஆகியவற்றின் சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க உதவுமாறு கேட்டுக்கொண்டனர்.
முஸ்லிம் இளைஞர்களுக்கு கல்வி துறையில் சிறப்பான வசதிகளை உருவாக்கித் தருமாறு வலியுறுத்தினர். தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவது பற்றி கவலை தெரிவித்த அவர்கள், ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், இந்த சவாலை சமாளிக்க கூட்டு முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.
மோடி உறுதி
அவர்கள் கூறியதை பிரதமர் மோடி பொறுமையாக கேட்டார். முஸ்லிம் மதத்தின் பல்வேறு பிரிவினரின் மனக்குறைகளை களைய தனது முழு ஆதரவை அளிப்பதாக அவர் உறுதி அளித்தார். முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களின் சொத்து பிரச்சினைகளை கவனிப்பதாக உறுதி அளித்தார்.முஸ்லிம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து, தேச கட்டுமானத்தில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு அளிப்பதன் அவசியத்தை மோடி வலியுறுத்தினார். முஸ்லிம்களின் கல்வி தேவையை பூர்த்தி செய்வதாகவும் கூறினார்.
மோடிக்கு ஆதரவு
அதைக்கேட்ட முஸ்லிம் மத தலைவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். விரைவான பொருளாதார வளர்ச்சி, மத நல்லிணக்கம், அமைதி, தேச பாதுகாப்பு ஆகிய பிரதமர் மோடியின் நோக்கங்கள் நிறைவேற அவருக்கு முஸ்லிம் சமுதாயத்தின் முழு ஆதரவை அளிப்பதாக உறுதி அளித்தனர்.இத்தகவல்கள், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளன
No comments:
Post a Comment