அஞ்சல் துறையில் இருந்து எவ்வாறு தந்தி அனுப்பும் முறை முடிவுக்கு வந்ததோ அதேபோல மரபார்ந்த `மணி ஆர்டர்' சேவையும் சத்தமில்லாமல் இந்த ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இருந்து முடிவுக்கு வந்துள்ளது. தகவல் தொடர்பு தொழில்நுட்பம் பெருகி வரும் இந்தக் காலத்தில், அதற்கு ஏற்றாற்போல் அரசின் பல்வேறு துறைகளிலும் நவீன மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அவ்வாறே கடந்த 2008ம் ஆண்டு அஞ்சல் துறையில் பணப் பரிமாற்ற சேவையைத் துரிதப்படுத்த `எலக்ட்ரானிக் மணி ஆர்டர்' (இ.எம்.ஓ.) சேவை மற்றும் `இன்ஸ்டன்ட் மணி ஆர்டர்' (ஐ.எம்.ஓ.) சேவை ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. இ.எம்.ஓ. மூலமாக ரூ.1 முதல் ரூ.5,000 வரையிலான தொகையை மணி ஆர்டர் செய்தால் ஒரே நாளில் பணப் பரிமாற்றம் நிகழ்ந்து விடும். அதேபோல ஐ.எம்.ஓ. மூலமாக ரூ.1,000 முதல் ரூ.50,000 வரையிலான தொகையை மணி ஆர்டர் செய்தால் உடனடியாக இணையம் மூலமாக பணப் பரிமாற்றம் நிகழ்ந்துவிடும்.
இதுகுறித்து இந்தியா போஸ்ட்டின் துணை இயக்குநர் (நிதி) ஷிகா மதூர் குமார் கூறும்போது, "மரபார்ந்த மணி ஆர்டர் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. அதற்குப் பதிலாக, தற்போதுள்ள இ.எம்.ஓ. மற்றும் ஐ.எம்.ஓ. சேவைகள் விரைவாகவும் சுலபமாகவும் பணப் பரிமாற்றம் செய்வதற்கு உதவுகிறது" என்றார்.
இதன் மூலம் சுமார் 135 ஆண்டு கால மணி ஆர்டர் சேவையின் பாரம்பரியம் முடிவுக்கு வந்துள்ளது.
No comments:
Post a Comment