திருச்சி மாவட்டம், துவாக்குடிமலைப் பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு தாமதமாக வரும் மணமகனுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை 20 ஆண்டுகளுக்கு மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகேயுள்ளது துவாக்குடிமலை. இங்கு இந்துக்கள் பெரும்பான்மையாக வசித்தாலும், 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினர் பல ஆண்டுகளாக கடைகள், வர்த்தக நிறுவனங்களை நடத்தி வாழ்ந்து வருகின்றனர்.
இங்குள்ள பழமையான ஜூம் ஆ பள்ளிவாசல், இப்பகுதி இஸ்லாமியர்களின் பிரதான வழிபாட்டு தலமாக உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த பெண்களை மணமுடிக்கும் வெளியூரைச் சேர்ந்த மணமகன்கள் திருமணத்துக்கு தாமதமாக வருவதால், விழாவுக்கு வரும் உறவினர்களும், நண்பர்களும் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. திருமணம் குறித்த நேரத்தில் நடைபெற வேண்டும் என்பதை வரைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், தாமதமாக வரும் மணமகனுக்கு அபராதம் விதிக்க 20 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளிவாசல் ஜமாத் தலைவராக இருந்த கே.எல்.கே.அப்துல் ரஹீம் முடிவு செய்து, அதை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து தற்போது ஜமாத் செயலாளராக உள்ள எம்.ஏ.ஜெய்னுதீன் ஆலிம் ‘தி இந்து’விடம் கூறியது: துவாக்குடிமலையின் அருகே பெல் நிறுவனம் மற்றும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு பணிபுரிவோர் திருமணத்தில் பங்கேற்பதற்காக ஒரு மணி நேரம் அனுமதி பெற்றுவருவர்.
வெளியூர்களிலிருந்து வரும் மணமகன்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், சில நேரங்களில், ஒரு மணி நேரம் கூட தாமதமாக திருமணத்துக்கு வருவார்கள். இதனால் அனைவருக்கும் பெரும் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. இதனால்தான் அபராதம் விதிக்கும் நடைமுறையே கொண்டு வரப்பட்டது.
அதிகபட்சமாக 5 நிமிடம் தாமதமாக வந்தால் ரூ.100 அபராதமும், அதற்குமேல் தாமதமாக வந்தால் ஜமாத் நிர்ணயிக்கும் அபராதத்தையும் செலுத்தவேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. எனினும், இதுவரை யாரும் ரூ.100-க்கு மேல் அபராதம் செலுத்தியதில்லை.
ரூ.100 என்பது பெரிய தொகை இல்லை என்றபோதிலும், பள்ளிவாசல் வரவு-செலவுக் கணக்கில் சேர்க்கப்பட்டு, ரம்ஜான் அன்று அந்தக் கணக்கு அனைவரின் முன்பும் பள்ளிவாசலில் படிக்கப்படும். மேலும், நோட்டீஸாக அச்சிட்டும் வழங்குவோம். திருமணத்துக்கு தாமதமாக வந்த குடும்பத்தாரிடமிருந்து வசூலித்த அபராதத் தொகை எனக் குறிப்பிடுவதால், இதைத் தவிர்ப்பதற்காகவே குறித்த நேரத்தில் திருமணத்துக்கு வந்து விடுகின்றனர்.
துவாக்குடிமலைக்கு மணமகன் வீட்டார் நிச்சயதார்த்ததுக்கு வரும்போதே திருமணத்துக்கு குறித்த நேரத்தில் கண்டிப்பாக வந்துவிட வேண்டுமெனத் தெரிவித்து விடுவோம். கடந்த 5 ஆண்டுகளாக எந்தத் திருமணமும் தாமதமாக நடக்கவில்லை. யாருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் வெளியூர்களில் நடைபெறும் திருமணத்துக்குச் செல்லும்போது, அங்கு மணமகன் வருவதற்கு தாமதமானால் “துவாக்குடிமலை போல இங்கும் அபராதம் விதித்தால் தான் குறித்த நேரத்தில் திருமணம் நடைபெறும்” என பிற ஜமாத்தார்கள் கூறுவர்.
நேர நிர்வாகத்தை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கம், அபராத நடைமுறையின் மூலம் நிறைவேறிவருவது பெருமையளிக்கிறது என்றார்.


    செய்தி
    படங்கள்: எஸ்.கல்யாணசுந்தரம்