Saturday 11 April 2015

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணி: தமிழகம் முழுவதும் நாளை (12/04/2015) சிறப்பு முகாம்

ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இதுவரை 35 லட்சம் பேரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார். மேலும், ஆதாரை இணைப்பது, வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என சந்தீப் சக்சேனா குறிப்பிட்டார். இது குறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி, விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டமானது, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கடந்த மார்ச் 3-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதற்காக வாக்குச் சாவடி அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி அதிகாரிகளுக்கு பயிற்சிகள் நடத்தப்பட்டன. அவர்கள் வீடுதோறும் சென்று விவரங்களைச் சேகரித்தனர். இந்தப் பணி கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடந்து வந்தது. தமிழகத்தில் மொத்தம் 5.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 2 கோடி பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. சேகரித்த விவரங்களை கணினியில் பதிவு செய்யும் பணியும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகிறது.
இதுவரை 35 லட்சம் பேரின் விவரங்கள் பதிவிடப்பட்டுள்ளன. விவரங்களைப் பதிவிடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேசிய வாக்காளர் சேவை இணையவழித் தடத்திலும் விவரங்களைப் பதிவு செய்யலாம்.
சிறப்பு முகாம்கள்: வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், ஆதார் விவரங்களை இணைக்கவும் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. ஏப்ரல் மாதத்தில் வரும் 12, 26 ஆகிய தேதிகளிலும், மே மாதத்தில் இரண்டாவது, நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளிலும், மாநிலம் முழுவதும் உள்ள 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிவரை முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தைக் கண்காணிக்க 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று முதல் நான்கு மாவட்டங்கள் வரை ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியின் போது, தனிநபர்கள் தங்களது தகவல்களைத் தெளிவாக அளிக்க வேண்டும். செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை குறிப்பிடுவது முக்கியம்.
மொத்தம் 4.18 கோடி பேர்: தமிழகத்தில் 18 வயது பூர்த்தி அடைந்து வாக்காளர்களாகத் தகுதி பெற்ற 5.62 கோடி பேரில், 4.18 கோடி பேருக்கு ஆதார் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, மொத்தமுள்ள வாக்காளர்களில் 82 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டைகள் உள்ளன.
ஆதார் அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கு, தேசிய வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்ததற்கான பதிவெண்ணோ, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான டின் எண்ணோ இருக்கும். இந்த எண்கள் பதிவு செய்யப்படும். அதன் பின், அவர்கள் ஆதார் அட்டையைப் பெறும்போது அதற்கான விவரம், தேர்தல் ஆணைய கணினியில் தானாகவே தெரியவரும். அதைக் கொண்டு வாக்காளர் பட்டியலில் ஆதார் விவரங்கள் இணைக்கப்படும். ஆதார் விவரத்தை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணியை மே 31-ஆம் தேதிக்குள் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு கேட்புகள்: தமிழகம் முழுவதும் வரும் 12-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமினைத் தொடர்ந்து, சிறப்பு கேட்புகள் ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகங்களில் நடத்தப்படும்.
இந்த சிறப்பு கேட்புகளுக்கான நேரம், ஒவ்வொரு அலுவலகத்தின் பிற வேலைகளைப் பொருத்து முடிவு செய்யப்படும். வாரத்துக்கு இரண்டு நாள்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஆதார் இணைப்பு போன்றவற்றில் பிரச்னை உள்ளவர்கள் இந்த சிறப்பு கேட்புக்கு அழைக்கப்படுவர். அவர்களிடம் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு தகவல்கள் உறுதிப்படுத்தப்படும் என்றார் சந்தீப் சக்சேனா. இந்தச் சந்திப்பின் போது, இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் (தகவல் தொழில்நுட்பம்) அஜய் யாதவ், சிவஞானம் (தேர்தல் விழிப்புணர்வு) ஆகியோர் உடனிருந்தனர்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?
சிறப்பு முகாமுக்குச் செல்லும் போது, என்னென்ன ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா விளக்கமளித்தார். அவர் கூறியது:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-ம், பெயரை நீக்க படிவம் 7-ம், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைத் திருத்த படிவம் 8-ம், வாக்காளர் பட்டியலில் பதிவை இடமாற்றம் செய்ய படிவம் 8ஏ-ம், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையைப் பெற விரும்புவோர் படிவம் 001-ம் பயன்படுத்த வேண்டும்.
இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் தகுந்த ஆவணங்களை இணைக்க வேண்டும். குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க வேண்டுமானால் சம்பந்தப்பட்டவரின் இருப்பிடச் சான்றையும், அடையாள சான்றுக்கான நகலையும் அளிக்க வேண்டும். இது போன்று ஒவ்வொரு படிவத்துடனும் அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது அவசியம்.
ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க ஆதார் அட்டையின் நகலை எடுத்து வர வேண்டும். அப்படி நகலைக் கொண்டு வந்தால், இணைக்கும் பணி எளிதாகும். ஒவ்வொரு சிறப்பு முகாமிலும் இரண்டு லேப்-டாப்கள் அளிக்கப்படும். அவற்றின் மூலம் இந்தப் பணி மேற்கொள்ளப்படும் என்றார் சந்தீப் சக்சேனா. குறுந்தகடு வெளியீடு: வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தி தகவல்களை உறுதிப்படுத்துவதற்கான திட்டம் குறித்த விழிப்புணர்வு குறும்படம் அடங்கிய குறுந்தகட்டினை சந்தீப் சக்சேனா வெளியிட்டார்.

No comments:

Post a Comment