Saturday, 4 April 2015

நிலம் கையகப்படுத்த புதிய அவசர சட்டம் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்



                   











































ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் காலாவதி ஆவதால், அது தொடர்பான புதிய அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி நேற்று ஒப்புதல் அளித்தார்.
நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, நிலம் கையகப்படுத்தும் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அதில் சில திருத்தங்கள் செய்து, தொழில் வளர்ச்சி, சாலை மேம்பாடு, துறைமுகங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் அமைத்தல் போன்றவற்றுக்காக நிலம் கையகப்படுத்த வகை செய்யும் அவசர சட்டத்தை ஜனாதிபதியின் ஒப்புதலுடன் கடந்த ஆண்டு பிறப்பித்தது.
இந்த அவசர சட்டம் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது என்று கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன.
மக்களவையில் நிறைவேறியது அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால், அது தொடர்பான மசோதாவை 6 மாதங்களுக்குள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசு நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும். அதன்படி, ‘நிலம் கையகப்படுத்துதல், புனரமைப்பு மற்றும் மறுகுடியமர்த்தலில் நியாயமான இழப்பீடு பெறும் உரிமை (திருத்தம்) மசோதா’ என்ற பெயரிலான நிலம் கையகப்படுத்தும் மசோதாவை, கடந்த பிப்ரவரி 23–ந்தேதி தொடங்கிய தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற முயன்றது.
பாராளுமன்ற மக்களவையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் அங்கு இந்த மசோதா கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டு 9 திருத்தங்களுடன் நிறைவேறியது.
மேல்–சபையில் சிக்கல் ஆனால் மேல்–சபையில் எதிர்க்கட்சிகளின் கைதான் ஓங்கி இருக்கிறது. ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இல்லை. இதனால் எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தி மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயன்றது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், விவசாயிகளின் நலனுக்கு எதிரான இந்த மசோதாவை ஆதரிக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறி விட்டன. அத்துடன் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்ட மசோதாவை மீண்டும் கொண்டு வந்தால் ஆதரிக்க தயார் என்று கூறின.
இதனால் மேல்–சபையில் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நாளைக்குள் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவேற்றி, அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், மேல்–சபையில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை மத்திய அரசால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.
முடித்து வைக்கப்பட்டது இதனால் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்தது. பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்றால், இரு சபைகளில் ஏதாவது ஒரு சபையை முடித்து வைக்கவேண்டும்.
இது பட்ஜெட் கூட்டத்தொடர் காலம் ஆகும். தற்காலிகமாக ஒரு மாதத்துக்கு கூட்டத்தொடருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனவே நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை பிறப்பிப்பதற்கு வசதியாக, கடந்த வாரம் மேல்–சபை கூட்டம் முடித்து வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஜனாதிபதி ஒப்புதல் இதைத்தொடர்ந்து, நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அந்த புதிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு கடந்த 31–ந்தேதி ஜனாதிபதிக்கு மத்திய மந்திரிசபை சிபாரிசு செய்தது. அந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் நாளை காலாவதியாக இருக்கும் நிலையில், மறு அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து இருக்கிறார். இதன்மூலம் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 1970–ம் ஆண்டு முதல் இதுவரை 7 தடவை அவசர சட்டங்கள் இரண்டாவது முறையாக பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
அடுத்தது என்ன? ஒரு பிரச்சினை தொடர்பான அவசர சட்டத்தை இரு முறைதான் பிறப்பிக்க முடியும். எனவே, நிலம் கையகப்படுத்தும் இந்த அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதாவை இன்னும் 6 மாதங்களுக்குள் பாராளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியாக வேண்டும். அப்படி மத்திய அரசால் நிறைவேற்ற முடியாமல் போனால் மூன்றாவது முறையாக அவசர சட்டத்தை பிறப்பிக்க முடியாது.
எதிர்க்கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக இருக்கும் பட்சத்தில், பாராளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தை கூட்டி மசோதாவை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் எதிர்ப்பு நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு மறுபடியும் பிறப்பித்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இதுபற்றி அக்கட்சியின் செய்தித்தொடர்பு பிரிவின் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பித்தது, பாராளுமன்ற ஜனநாயகத்தை மத்திய அரசு அவமதிப்பது போல் உள்ளது என்றார். மேலும் தொழில் அதிபர்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதையே இந்த நடவடிக்கை காட்டுவதாகவும் அப்போது அவர் கூறினார்.
நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்துக்கு எதிராக வருகிற 19–ந்தேதி மாபெரும் பேரணி ஒன்றை நடத்த காங்கிரஸ் கட்சி தீர்மானித்து உள்ளது. இதில் அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment