பிளஸ் 2 தேர்வில் கடைசிப் பாடமான உயிரியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயிரியல் பாடத்தில் விலங்கியல் பிரிவில் பெரும்பாலான கேள்விகள் எதிர்பாராதவையாக இருந்தன. விலங்கியல் பிரிவில் 10 மதிப்பெண், 3 மதிப்பெண் கேள்விகள் நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகளுக்கு நிகராகக் கடினமானவையாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 தேர்வு தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 5-ஆம் தேதி தொடங்கியது. 2,377 தேர்வு மையங்களில் 8.82 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இதில் உயிரியல் தேர்வு எழுதிய மாணவர்கள் மிகுந்த சோகமடைந்தனர்.
உயிரியல் பாடத்தில் தாவரவியல் பகுதி வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தன. ஆனால், விலங்கியல் பகுதியில் இருந்த வினாக்கள் மிகக் கடினமாக இருந்தன. 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்த ஆண்டு வினாத்தாள்தான் கடினமானதாக இருந்தது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அதேநேரத்தில், இதில் எந்தக் கேள்வியும் புத்தகத்துக்கு வெளியிலிருந்து வந்ததாகவோ, தவறானதாகவோ இல்லை. பாடங்களுக்கு இடையே அதிகம் எதிர்பார்க்காத பகுதிகளில் இருந்து வினாக்கள் வந்திருந்தன. ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கும், சுமாராகப் படிக்கும் மாணவர்களுக்கும் இது மிகவும் கடினமான வினாத்தாளாக இருந்தது. நன்றாகப் படிக்கும் மாணவர்கள் கூட 150 மதிப்பெண்ணுக்கான உயிரியல் தேர்வில் 130 மதிப்பெண்ணைத் தாண்டுவது சிரமம் என அவர்கள் தெரிவித்தனர்.
விடைத் தாள் திருத்தும் பணிகள் ஏப்.6-இல் தொடக்கம்: முக்கியப் பாடங்களுக்கான விடைத் தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்க உள்ளது. பிளஸ் 2 விடைத் தாள் திருத்தும் பணிகள் ஒரு வாரம் முதல் 10 நாள்கள் வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு மே முதல் வாரத்துக்கு முன்னதாக பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட வாய்ப்பில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
உயிரியல் பாட விடைத் தாள்கள் சேகரிப்பு மையங்களில் இருந்து, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு 2 நாள்களில் எடுத்துச் செல்லப்பட உள்ளன.
பிடிபட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு
பிளஸ் 2 தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டு பிடிபட்ட மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் காப்பியடித்தபோது மொத்தம் 394 மாணவர்கள் சிக்கினர். கடந்த ஆண்டு 194 மாணவர்கள் பிடிபட்டனர். துண்டுச் சீட்டு வைத்திருத்தல், பக்கத்தில் உள்ள மாணவர்களைப் பார்த்து எழுதுதல் போன்ற தேர்வறை ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டது.
ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களை பிடிக்காமல் இருந்தால், அந்த தேர்வறை கண்காணிப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன் காரணமாகவே, இந்த ஆண்டு காப்பியடித்தபோது பிடிபட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
33 பேர் சிக்கினர்: உயிரியல், தாவரவியல், வரலாறு பாடங்களில் காப்பியடித்ததாக செவ்வாய்க்கிழமை 33 பேர் சிக்கினர். உயிரியல் பாடத்தில் காப்பியடித்ததாக 10 பேரும், தாவரவியல் பாடத்தில் 8 பேரும், வரலாறு பாடத்தில் 15 பேரும் பிடிபட்டனர்
No comments:
Post a Comment