Tuesday, 7 April 2015

அரசு பொது இ-சேவை மையங்களில் ரூ.30 கட்டணத்தில் விரைவில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை

 



தமிழகத்தில் ஏற்கெனவே ஆதார் அட்டை கிடைக்கப் பெற்றவர்களுக்கு அரசு பொது இ-சேவை மையங்களில் ரூ.30 கட்டணத்தில் பிளாஸ்டிக் (பிவிசி) ஆதார் அட்டை வழங்கும் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 74 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையின் அடிப்பகுதியில் உள்ள விவரங்களை வெட்டி அதை அடையாள ஆவணமாக பயன்படுத்துமாறு ஆதார் அட்டை வழங்கும் யூஐடிஏஐ நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது.

நாடு முழுவதும் ஆதார் அட்டை வழங்கும் சேவையை யூஐடிஏஐ நிறுவனம் நேரடியாக செய்து வந்தாலும், தமிழகத்தில் மாநில அரசின் அறிவுறுத்தல்படி மக்கள்தொகை பதிவேடு திட்ட முறையில் தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் ஆதார் அட்டைக்கான விவரங்களை பதிவு செய்து வருகிறது. எனவே யூஐடிஏஐ நிறுவனத்துக்கு தமிழகத்தில் அலுவலகம் திறக்கப்படவில்லை.

அதனால் ஆதார் அட்டை தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ வேறு அட்டை பெறுவதில் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. அதற்கான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் பொது இ-சேவை மையங்களில் ஆதார் அட்டைகளை வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் 254 தாலுகா அலுவலகங்களிலும் பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏற்கெனவே சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று வழங்குவது மற்றும் அரசின் சமூக நல திட்டங்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பதிவும் ஆன்லைனில் செய்யப்படுகின்றன. மேலும் பல்வேறு புதிய சேவைகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக ஏற்கெனவே ஆதார் அட்டை கிடைக்கப் பெற்றவர்களுக்கு ஏடிஎம் கார்டு வடிவில் பிளாஸ்டிக் ஆதார் கார்டுகளை வழங்கும் சேவை விரைவில் தொடங்க உள்ளது.

இது தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த அட்டையை வழங்குவதற்கான உரிமத்தை யூஐடிஏஐ நிறுவனத்திடமிருந்து அரசு கேபிள் டிவி நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி ரூ.30 கட்டணத்தில் பிவிசி என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக்கில் வண்ண ஆதார் அட்டை வழங்கப்படும். இதை வங்கி ஏடிஎம் மற்றும் பான் அட்டைகளோடு சேர்த்து பாக்கெட்டில் வைத்துக்கொள்வது எளிது. இதற்காக யூஐடிஏஐ நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 196 பிரிண்டர்கள் சம்பந்தப்பட்ட பொது இ-சேவை மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இச்சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

ஆதார் அட்டைக்கு உரியவர் தனது கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஆதார் அட்டை பதியும்போது வழங்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டு என்று அழைக்கப்படும் ஓடிபி எண்ணை தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே பிளாஸ்டிக் ஆதார் அட்டையை பிரின்ட் செய்ய முடியும். விரைவில் கருவிழி படலத்தை பதிவு செய்து அதன் மூலம் சம்பந்தப்பட்ட நபரை அங்கீகரிக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். ஒரு நபர் எத்தனை அட்டைகளை வேண்டுமானாலும் தலா ரூ.30 கட்டணத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த அட்டையை வேறு நபர் பெற வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
அரசு பொது இ-சேவை மையங்களில் வழங்கப்படவுள்ள ஏடிஎம் கார்டு வடிவிலான பிளாஸ்டிக் (பிவிசி) ஆதார் அட்டை.

No comments:

Post a Comment