Tuesday 14 April 2015

சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான மெயின் தேர்வு முடிவு வெளியீடு
























சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் 71 பேர் தேர்வு பெற்றுள்ளனர். நேர்முகத்தேர்வு 27-ந் தேதி தொடங்குகிறது.

ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வு

அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான அகில இந்திய பணிகளுக்கான தேர்வை நடத்துகிறது. முதலில் முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வில் தேர்வு பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மெயின் தேர்விலும், நேர்முகத்தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு இறுதியாக அறிவிக்கப்படுவார்கள்.

அதன்படி 1300 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 9 லட்சம் பேர் எழுதினார்கள். முடிவு அக்டோபர் மாதம் 14-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 17 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். மெயின் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. இதை 17 ஆயிரம் பேர் எழுதினார்கள். மெயின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. 3 ஆயிரத்து 293 பேர் தேர்வு பெற்றுள்ளனர். மெயின் தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் வருகிற 27-ந் தேதி முதல் டெல்லியில் நடைபெற உள்ள நேர்முகத்தேர்வுக்கு செல்ல இருக்கிறார்கள். நேர்முகத்தேர்வு முடிந்த பின்னர் இறுதியாக தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்படும்.

மனிதநேய மையத்தில் 71 பேர் தேர்வு

சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. அந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 71 பட்டதாரிகள் சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 42 பேர் மாணவர்கள். 29 பேர் மாணவிகள்.

இது குறித்து மனிதநேய மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதன்மை தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ-மாணவிகள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எமது மையத்தில் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

இலவச பயிற்சி

அவ்வாறு நேர்முகத்தேர்வுக்கு பதிவு செய்து கொள்ளும் அனைவருக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment