Thursday, 2 April 2015

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: மானியமில்லாத சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு



பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 காசுகளும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.1.21-ம் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மானியமில்லாத சமையல் எரிவாயு விலை ரூ.11 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை மாறுதல் நடவடிக்கை புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசலின் விலை குறைந்துள்ளது; இதேபோல், இந்திய ரூபாய் - அமெரிக்க டாலர் மாற்று விகிதமும் குறைந்துள்ளது. இந்த 2 காரணங்களும், பெட்ரோல், டீசலின் சில்லறை விற்பனை விலையைக் குறைக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். அதன்படி, தில்லியில் பெட்ரோலின் விலை ரூ. 60ஆகவும், டீசலின் விலை ரூ.48.50 ஆகவும் உள்ளன. கொல்கத்தாவில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 40 காசுகள் குறைந்து, ரூ.67.48ஆகவும், டீசலின் விலை ரூ.1.08 குறைந்து ரூ.53.23ஆகவும் உள்ளன. மும்பையில், பெட்ரோலின் விலை 50 காசுகள் குறைந்து, ரூ.67.53ஆகவும், டீசலின் விலை ரூ.1.34 சரிந்து ரூ.55.69ஆகவும் விற்கப்படுகின்றன.
சென்னையில்...: சென்னையில் பெட்ரோலின் விலை 51 காசுகள் குறைந்து ரூ.62.75ஆகவும், டீசலின் விலை ரூ.1.31 சரிந்து ரூ.51.61ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த விலைக் குறைப்பையும் சேர்த்து, 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து தற்போது வரை, பெட்ரோலின் விலை 10 முறையும், டீசலின் விலை 6 முறையும் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, பெட்ரோல் விலை மொத்தம் ரூ.17.11-ம், டீசலின் விலை ரூ.12.96-ம் குறைக்கப்பட்டிருக்கின்றன. எனினும், மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை, ரூ.11 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தில்லியில் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லாத சமையல் எரிவாயு உருளை ரூ.621க்கு விற்பனை செய்யப்படும்.
மானியமில்லாத சமையல் எரிவாயுவின் விலை கடந்த மாதம் ரூ.5 அதிகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக மீண்டும் தற்போது அதன் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment