Wednesday, 22 April 2015

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு விருது

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஷ் அகமதுவுக்கு விருது வழங்கிக் கெளரவிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.


தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஷ் அகமதுவுக்கு விருது வழங்கிக் கெளரவிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.


பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அகமதுக்கு பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் செவ்வாய்க்கிழமை விருது வழங்கிக் கெளரவித்தார்.

நம் நாட்டில் 2006-ஆம் ஆண்டு முதல் "குடிமைப் பணி' (சிவில் சர்வீஸஸ்) நாளாக ஏப்ரல் 21-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, இந்த ஆண்டு குடிமைப் பணி நாளைக் கொண்டாடும் வகையில், 2012-13, 2013-14 ஆகிய ஆண்டுகளில் சிறப்பாகப் பணியாற்றிய குடிமைப் பணி அதிகாரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தில்லி விஞ்ஞான் பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, பல்வேறு குடிமைப் பணி அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கிக் கெளரவித்தார்.
இதில் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் தரேஸ் அகமதுக்கு பதக்கம், ரூ.1 லட்சம் பரிசுத் தொகை ஆகியவற்றை வழங்கிப் பாராட்டினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண் சிசுக் கொலை, கருக்கலைப்பு உள்ளிட்ட காரணங்களால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருந்து வந்தது. இதைத் தடுக்கும் வகையில், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் தரேஸ் அகமதுவின் உத்தரவின் பேரில் கிராம செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் மூலமாக கிராமப்பகுதிகளில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்களா? கருக்கலைப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறார்களா? என்பது முழுமையாகக் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டு வந்தன.

மேலும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று சட்டத்துக்குப் புறம்பாக அறிவிக்கும் ஸ்கேன் சென்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தல் என்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதமும் அதிகரித்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2011-12-இல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 861 பெண் குழந்தைகள் என்று இருந்த நிலை மாறி, 2012-13-இல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 1,016 பெண் குழந்தைகள் எனப் பிறப்பு விகிதம் அதிகரித்தது.
ஏற்கெனவே, பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அகமதுக்கு 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக அரசு சார்பில் ரூ.2 லட்சம் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment