Monday 13 April 2015

பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட திட்டம் தற்போதைய கட்டிடம் அருங்காட்சியகமாக மாறுகிறது







































டெல்லியில் பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போதைய கட்டிடம் அருங்காட்சியகமாக மாறுகிறது.

88 ஆண்டுகள் பழமை
டெல்லியில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் 6 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.83 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு 1927–ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கிவைக்கப்பட்டது. 560 அடி சுற்றளவும், 8.23 மீட்டர் உயரமும் கொண்ட பாராளுமன்றம் 12 நுழைவு வாயில்களை கொண்டது.
88 ஆண்டுகள் பழமையாகிவிட்ட பாராளுமன்றத்தை பாரம்பரிய நினைவுச் சின்னமாக மாற்றும் விதமாக மத்திய அரசு புதிய பாராளுமன்ற கட்டிடம் ஒன்றை கட்டுவதற்கான தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது.

பரிந்துரைக்கு முழுவடிவம்
சில மாதங்களுக்கு முன்பு பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் குழு, கே.வி.தாமஸ் தலைமையிலான பொதுக்கணக்கு குழு, முரளிமனோகர் ஜோஷி தலைமையிலான மதிப்பீட்டு குழு மற்றும் அதிகாரிகளின் கூட்டம் டெல்லியில் நடந்தது.
அதில் பாராளுமன்றத்தை புதிய இடத்துக்கு மாற்றுவது தொடர்பான பரிந்துரை பற்றி பரிசீலனை செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு பிரதமர் மோடி இந்த பரிந்துரைக்கு முழு வடிவம் கொடுப்பார் என பாராளுமன்ற விவகார மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வியும் இதனை உறுதி செய்தார்.

கட்டிடத்துக்கு பாதிப்பு
அண்மையில் பாராளுமன்ற கட்டிட கட்டமைப்பின் பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், இந்த பாரம்பரிய கட்டிடத்துக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக அவ்வப்போது நடைபெறும் புதுப்பிக்கும் பணிகளால் பாராளுமன்றம் கட்டிடம் அதிக அளவில் சேதமடைந்து இருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது.
பாராளுமன்ற கட்டிடத்தை பராமரிக்கும் பணியில் அன்றாடம் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டாலும் கூட, அதன் மேற்பகுதியில் இருந்து வெளியேறும் நீர்க்கசிவை முற்றிலுமாக சரி செய்ய முடியவில்லை.

கட்சிகள் வற்புறுத்தல்
தவிர பாராளுமன்ற மேற்கூரையில் இருந்து மண் உதிர்ந்து விழுவதும் தொடர் கதையாக உள்ளது. இதனால் பாரம்பரியமும், வரலாற்று தொன்மையும் மிக்க பாராளுமன்ற கட்டிடத்தை பாதுகாக்கவேண்டிய அவசியம் எழுந்து இருக்கிறது.
இதனால் பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்ற சிந்தனை பிரதமர் மோடியிடம் வலுப்பெற்று உள்ளது.
இது தவிர எம்.பி.க்கள் தங்கும் வகையிலும், அதிக அலுவலகங்கள் செயல்படும் விதமாகவும் பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வற்புறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

அருங்காட்சியகமாக மாறும்
புதிய பாராளுமன்றம் கட்டும்போது அதன் புற வடிவமைப்பை தற்போதுள்ள தோற்றத்திலேயே உருவாக்கவேண்டும் என பாராளுமன்ற விவகார அமைச்சகம் யோசனை தெரிவித்து உள்ளது.
பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டால் பழைய கட்டிடம் அருங்காட்சியகமாக மாற்றப்படும் என்றும் தெரிகிறது.

No comments:

Post a Comment