தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்தி மொழித்திறன் பெற்ற இளம் தலைமுறையினர் வட மாநிலங்களிலும், மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் எளிதில் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபா இதற்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின்போது மக்களை ஒன்றிணைக்க ஹிந்தி மொழி ஒரு கருவியாகப் பயன்படும் என்ற நோக்கத்துடன் "தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபா'வை 1918-இல் சென்னையில் தொடங்கி வைத்தார்.
அத்துடன் தனது மகன் தேவதாஸ் காந்தியை ஹிந்தி பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார். 1936 முதல் தமிழகத்தில் ஹிந்தி பிரசாரத்தை திருச்சியில் உள்ள தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபா ஏற்றுக் கொண்டது.
நிர்வாக வசதிக்காகவும், பிரசாரப் பணிக்காகவும் தென்மாநிலங்களில் இதன் கிளைகள் தொடங்கப்பட்டன.
தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபாவின் முக்கியத்துவத்தை உணர்த்த மத்திய அரசு 1964-ஆம் ஆண்டு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக இதை அங்கீகரித்து அறிவித்தது.
மும்மொழித் திட்டமாக கல்வி நிலையங்களில் தாய்மொழி, ஆங்கிலம், ஹிந்தி ஆகியன இருந்து வந்த நிலையில், 1962-இல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் தீவிரமடையத் தொடங்கியது. இதன் காரணமாக 1967-இல் இருமொழித் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதனால் நாட்டின் தேசிய மொழியான ஹிந்தியை தமிழக மாணவர்கள் அனைவரும் கற்கும் வாய்ப்பு பறிபோனது. இந்நிலையில் மத்திய அரசு நிதியுதவியுடன், ஓராசிரியர் வித்யாலயம், பகுதி நேர வித்யாலயம், பள்ளி நேரத்திற்குப் பிறகு ஹிந்தி வகுப்பு திட்டங்கள் மூலம் இன்றைக்கு தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபா தனது பணியை ஆற்றி வருகிறது.
தமிழகக் கிளைகள்: வேலூர், புதுச்சேரி, காரைக்கால், கடலூர், நெய்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, கரூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் சபாவின் கிளை அலுவலகங்கள் உள்ளன.
தற்போது ஹிந்தி ஆரம்ப நிலைத் தேர்வான பிராத்மிக் தேர்வை மட்டும் 3.25 லட்சம் மாணவ, மாணவியர் தமிழகத்தில் ஆண்டுதோறும் எழுதுகின்றனர்.
பிராத்மிக், மத்யமா, ராஷ்டிரபாஷா, பிரவேஷிகா, விஷாரத் பூர்வார்த்த, விஷாரத் உத்தரார்த்த, பிரவீண் பூர்வார்த்த, பிரவீண் உத்தரார்த்த ஆகிய 8 தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அத்துடன் ஹிந்தி தட்டச்சுப் பயிற்சி வகுப்புகளும் அனைத்துக் கிளைகளிலும் நடத்தப்படுகின்றன.
பிராத்மிக் வகுப்பில் சேர 5-ஆவது படித்திருக்க வேண்டும். 6 தேர்வுகளை முடித்த பிறகு விஷாரத் பட்டமும், பிரவீண் தேர்வில் தேர்ச்சியை அடுத்து முதுநிலைப் பட்டமும் வழங்கப்படுகின்றன.
வேலைவாய்ப்புகள்: தமிழகத்தில் உயர்கல்வித் தகுதியுடன் ஹிந்தித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அத்துடன் ஹிந்தி தட்டச்சு தேர்ச்சி கூடுதல் தகுதியாகவும் கருதப்படுகிறது.
இந்திய ரயில்வே, அஞ்சல் துறை, மத்திய அரசு சார்ந்த பொது நிறுவனங்கள், தில்லியை தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிறுவனங்கள், முப்படைகள், எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றில் ஹிந்தி தேர்ச்சித் தகுதிக்காக கூடுதல் மதிப்பெண் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.
- ஆர்.ராமலிங்கம்.
No comments:
Post a Comment