Saturday, 31 October 2015

மனிதநேய மக்கள் கட்சி: செயல்வீரர்கள் கூட்டம்

திருவாரூரில் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஒருங்கிணைந்த மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் டிசம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் திரளாகப்  பங்கேற்பது, 2016 பேரவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.   கூட்டத்தில் தமுமுக மாநிலத் தலைவர் ரிபாயி ரஷாதி செய்தியாளர்களிடம் கூறியது:
 மோடி அரசு பதவியேற்று 17 மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.  பாஜகவின் அமைச்சர்கள், தலைவர்கள் சிறுபான்மையினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இப்போக்கை பிரதமர் மோடி தலையிட்டு தடுக்க வேண்டும்.   மக்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டியக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி  பங்கேற்றது. அரசியல் கூட்டணியாக மாற்றப்படும் என்ற பேச்சு எழுந்தவுடன் நாகரிகமாக விலகியது. தமிழகத்தில் விவசாயிகள் பிரச்னை குறித்து தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி அவர்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 இந்தியாவில் அதிகளவில் பருப்பு பறிமுதல் செய்த பிறகும் விலை குறையவில்லை. பருப்பு விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்றார்.
  மமக மாநில துணைப் பொதுச் செயலாளர் கோவை செய்யது, மமக மாவட்டப்  பொருளர் தீன்முகம்மது, தமுமுக மாவட்டப் பொருளர் பஜிலுல்ஹக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment