Saturday, 24 October 2015

வடகிழக்கு பருவமழை 28-ந்தேதி தொடங்குகிறது வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் பேட்டி









வடகிழக்கு பருவமழை 28-ந் தேதி தொடங்குகிறது என்று சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

28-ந் தேதி தொடங்குகிறது

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டி உள்ள இலங்கை கடற்கரை பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகி உள்ளது. அதன் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. 26-ந் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் காரணமாக வடகிழக்கு பருவமழை 28-ந் தேதி தொடங்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அதாவது 28-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.

இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

3 ஆண்டுகளாக குறைந்த அளவில் மழை

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டுக்கு சராசரியாக 44 செ.மீ. மழை பெய்யவேண்டும். ஆனால் கடந்த 3 வருடங்களாக மழை பொய்த்துவிட்டது. 2012-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரி அளவை விட 16 சதவீதம் குறைவாக பெய்தது. 2013-ம் ஆண்டு 33 சதவீதம் மழை குறைவாக பெய்தது. 2014-ம்(கடந்த ஆண்டு) ஆண்டு 2 சதவீதம் குறைவான மழை பெய்துள்ளது.

இந்த வருடமாவது வடகிழக்கு பருவமழை போதிய அளவுக்காவது பெய்யவேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். சராசரியாக அக்டோபர் மாதம் 20-ந் தேதி தொடங்கும். ஆனால் அக்டோபர் 24-ந் தேதி ஆகியும் தொடங்கவில்லை.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

கன்னிமார் 8 செ.மீ., சிவகிரி 7 செ.மீ., பூதப்பாண்டி, ராஜபாளையம் தலா 3 செ.மீ., கடலாடி, ஸ்ரீவைகுண்டம் தலா 2 செ.மீ., பேச்சிப்பாறை, தக்கலை தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

சென்னையில் மழை

மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை வேப்பேரி, நுங்கம்பாக்கம், தாம்பரம் பகுதிகள் மற்றும் சென்னை சுற்றுப்புறங்களில் நேற்று பகலில் மழை தூறிக்கொண்டே இருந்தது.

அதன் காரணமாக பகலிலேயே குளிர்ந்த காற்று வீசியது.

No comments:

Post a Comment