Sunday, 11 October 2015

முகவர்கள் மூலம் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை













அங்கீகாரம் செய்யப்பட்ட முகவர்கள் மூலம் மட்டுமே வெளிநாட்டு பணிக்கு செல்லுங்கள் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

சுரண்டலை தடுக்க, வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் அங்கீகாரம் செய்யப்பட்ட முகவர்கள் மூலம் செல்லுங்கள் என்று மத்திய வெளியுறவுத் துறை இணைமந்திரி வி.கே.சிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார். 

வேலூர் மாவட்டம் மூங்கிலேறி கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி முனிரத்தினம் என்பவர் வீட்டு வேலை பணிக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு முதலாளியால் அவர் துன்புறுத்தப்பட்டார். மேலும் கஸ்தூரியின் கையும் வெட்டப்பட்டது. இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு, சவுதி அரேபியாவை வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில் வெளிநாட்டிற்கு பணிக்கு செல்லும் மக்களை எச்சரிக்கும் விதமாக மத்திய இணைமந்திரி எச்சரிக்கையை விடுத்து உள்ளார். 

இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய வி.கே. சிங், “மீடியா வாயிலாக ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன், வெளிநாட்டில் பணியினை பெறுவதற்காக முகவர்கள் மக்கள் தவறாக வழிநடத்தப்படக் கூடாது. இதுபோன்றவர்கள் (மோசடி முகவர்கள்) மூலம் வெளிநாட்டிற்கு செல்பவர்களுக்கு அந்நாட்டின் விதிமுறைகள் மற்றும் மோசமான வேலையில் செய்ய வேண்டியது என்ன என்பது தெரிந்திருக்க முடியாது,” என்று கூறினார். வேலைக்கு செல்லும் நாட்டின் விதிமுறைகள் தெரியாமல் சென்றால் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளார். 

“அரசு அங்கீகாரம் செய்த முகவர்கள் மூலம்தான் வெளிநாடு செல்கிறோம் என்பதை மக்கள் உறுதிசெய்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் போகாதீர்கள். மக்களுக்கு விழிப்புணர்வு தேவையானது. அதிகமான மக்கள் போலியான முகவர்கள் மூலம் செல்கின்றனர், போலி முகவர்களுக்கு வெளிநாடுகளின் சட்ட திட்டங்கள் தெரியாது. எனவே அவர்கள் உங்களுக்கு நீங்கள் செல்லும் நாட்டைப் பற்றி முழுமையான தகவலை அளிக்கமாட்டார்கள். மொழியும் தெரிய வாய்ப்பு கிடையாது. அங்குதான் எல்லா சிக்கலும் ஆரம்பமாகிறது.” என்று கூறிஉள்ளார். 

கை வெட்டப்பட்டு காயத்துடன் கஸ்தூரி முனிரத்தினம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் வெளியுறவுத்துறை தொடர்பில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


0
வாசிக்கப்பட்டது
1
பிரதி
Share

No comments:

Post a Comment