திருவாரூரில் திங்கள்கிழமை (அக். 26) நடைபெறவுள்ள ஆழித்தேர் வெள்ளோட்டத்தையொட்டி, நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருவாரூரில் சனிக்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர், சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. தேர் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளில் வருவதால் இவ்வழியில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, சென்னை, கடலூர், சீர்காழி, மயிலாடுதுறை, நன்னிலம், நாகூர், ஓடாச்சேரி, திட்டச்சேரி, திருமருகல் ஆகிய வழித் தடங்களில் வரும் பேருந்துகள், இதர வாகனங்கள் கொடிக்கால்பாளையம் அய்யனார்கோவில் தெரு, நேதாஜி சாலை, பேபி டாக்கீஷ் சாலை வழியாக திருவாருர் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
இதேபோல திருவாருர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கடலூர், சீர்காழி, மயிலாடுதுறை, நன்னிலம், நாகூர், ஓடாச்சேரி, திட்டச்சேரி மற்றும் திருமருகல் ஆகிய வழித் தடங்களில் செல்லும் பேருந்துகள், இதர வாகனங்கள் மேம்பாலம், விளமல், பவித்திரமாணிக்கம், காட்டூர், திருக்கண்ணமங்கை, வடகண்டம், வெட்டாற்றுபாலம், எட்டியலூர், மத்தியப் பல்கலைக்கழகம், கங்களாஞ்சேரி வழியாக செல்ல வேண்டும்.
No comments:
Post a Comment