Friday, 16 October 2015

கலாம் வரலாறு அல்ல, இந்திய இளைஞர்களின் எதிர்காலம்: விஞ்ஞானி பொன்ராஜ் பேச்சு

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு முன்னாள் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவில் அவர் பேசியதாவது:
 நம் நாட்டில் வாழும் 64 கோடி இந்திய இளைஞர்களின் மனதில் அப்துல் கலாம் குடியிருக்கிறார். ஈரோடு புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தியதன் மூலம் கலாமின் மனதில் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரனும் இடம் பிடித்துள்ளார்.
 அப்துல் கலாமுக்கு நெருக்கமான வெகு சில நண்பர்களில் தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும் ஒருவர். சென்னையில் முதன் முதலில் அப்துல் கலாமுக்கு விழா எடுத்து சிறப்பித்தப் பெருமை தினமணி நாளிதழுக்குதான் உண்டு.
 லட்சியங்கள் பெரிதாக இருக்க வேண்டும். சிறியதாக எண்ணுவது குற்றம். எண்ணுவது பெரிதாக எண்ண வேண்டும். எந்தச் செயலைச் செய்தாலும் அந்தச் செயல் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கலாம் அடிக்கடி சொல்வார்.
 ராமேசுவரத்தில் பிறந்த 10 வயது சிறுவனின் கனவு இன்று இந்திய தேசத்தின் கனவாக மாறியுள்ளது. அவர் பள்ளி மாணவராக இருந்தபோது, ஒரு பறவை எப்படிப் பறக்கிறது என அவரது ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் பாடம் நடத்தியபோது, நமது வாழ்விலும் பறக்க வேண்டும் என்ற லட்சியக் கனவு அவருக்குள் பிறந்தது.
 அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் திருச்சி கல்லூரியில் இயற்பியலும், சென்னை எம்.ஐ.டி.யில் ஏரோநாட்டிக்கல் படிப்பும் படித்தார். அவர் ஏரோநாட்டிக்கல் படிப்பு படித்தபோது, அந்தப் படிப்புக்கு இந்தியாவில் வேலை இல்லாத நிலை இருந்தது. இதைப் படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்காது என்று தெரிந்திருந்தும், தனது லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காக அவர் ஏரோநாட்டிக்கல் படிப்பு படித்தார்.
 ஏரோநாட்டிக்கல் படித்து முடித்தவுடன் விமான ஓட்டி (பைலட்) பணிக்காக, அவர் தேர்வை எதிர்கொண்டார். ஆனால், அதில் அவர் தேர்வு பெறவில்லை. மனம் தளர்ந்த அப்துல் கலாம் ரிஷிகேஷத்தில் உள்ள சிவானந்தர் ஆசிரமத்துக்கு சென்று, சுவாமி சிவானந்தரைச் சந்தித்தார். அவர், "உனக்காக விதிக்கப்பட்டிருந்த ஒரு லட்சியம் காத்துக் கொண்டு இருக்கிறது. அது வெல்லும்' என்ற நம்பிக்கையை அவருக்கு அளித்தார்.
 இதன் தொடர்ச்சியாக டிஆர்டிஓவில் அறிவியல் உதவியாளர் பணி அப்துல் கலாமுக்கு கிடைத்தது. அப்போது அவர் உருவாக்கிய பறக்கும் இயந்திரம்தான் இப்போது நமது கடல்பகுதியை பாதுகாக்கும் பணியைச் செய்து வருகிறது. 
 இந்தியாவின் முதல் ராக்கெட்டை வடிவமைத்து, ரோகிணி என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவியதன் மூலம், உலகில் இந்த வல்லமை பெற்ற 4-ஆவது நாடாக இந்தியா மாறியது. அதன்பின் சந்திரயான், மங்கள்யான் போன்றவை முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றன. 
 ஒரு காலத்தில் நமது நாட்டை ஆண்ட பிரிட்டனின் செயற்கைக்கோளை இந்தியா ஏவச்செய்யும் நிலை இப்போது உருவாகியுள்ளது. இதற்கெல்லாம் அப்துல் கலாமின் கனவுதான் காரணம். 
 இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கலாமிடம் பொறுப்பு அளிக்கப்பட்டது. ஓராண்டு கடுமையான உழைப்பின் காரணமாக, 5 ஏவுகணைகள் தயாரிக்கத் திட்டம் வகுக்கப்பட்டது. இந்த ஏவுகணை 5,000 கிலோ மீட்டரைத் தாண்டி எப்போது செல்லும் என்று கலாமிடம் அப்போதைய பிரதமர் இந்திரா கேட்டார். அக்னி-5 ஏவுகணையை நாம் ஏவும்போது, இந்த இலக்கை நாம் அடைய முடியும் என்றார் கலாம்.
 இன்று அக்னி- 5 ஏவப்பட்டபோது, அது 5,000 கிலோ மீட்டரை தாண்டி, 8,000 கி.மீ. வரை பாயக் கூடிய வல்லமை பெற்றதாக உள்ளது. இப்போது நமது நாட்டின் மீது எந்த நாடு அணுகுண்டு போட்டாலும், அதை வானத்திலேயே அழித்து, நாட்டைக் காக்கும் வல்லமை நமக்கு வந்துள்ளது.
 அணுகுண்டுகளைக் கொண்டு மற்ற நாடுகள் மிரட்டிய நிலையில், உலக நாடுகள் இந்தியாவை ஆயுதச் சந்தையாக மாற்றியிருந்த நிலையில், விண்வெளியில் பல சாதனைகளைச் செய்து ஏவுகணை, அணுகுண்டு என பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்து இந்தியாவின் பாதுகாப்பை அப்துல் கலாம் பலப்படுத்தினார்.
 இந்தப் பணியை முடித்தபின் அவர் பதவி விலக விரும்பியபோது, அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் விரும்பவில்லை. அதன் பின், பிரதமராக வந்த வாஜ்பாயும், மத்திய அமைச்சருக்கு இணையான கௌரவத்துடன் பாதுகாப்பு ஆலோசகர் பதவியைக் கொடுத்து அவரைப் பயன்படுத்திக் கொண்டார்.
 இந்தக் காலகட்டத்தில் பிகாரில் 2,500 ஹெக்டேரில் விஞ்ஞானிகள், வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர்களைக் கொண்டு இயற்கை விவசாயம் செய்து இரண்டாம் பசுமைப் புரட்சிக்கு கலாம் வித்திட்டார். அவரது இந்த முயற்சியால் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 2 டன் நெல் விளைந்த நிலை மாறி அது 5 டன்னாக உயர்ந்தது. 3 டன் கோதுமை விளைச்சல் 7 டன்னாக உயர்ந்தது.
 அத்துடன் 2020-இல் இந்தியா வல்லரசாக 25 துறைகளில் அறிக்கை தயாரித்து, "விஷன் 2020' என்ற திட்டத்தை அப்துல் கலாம் வகுத்தார். அதை நாட்டின் தேசியக் கொள்கையாக அப்போதைய பிரதமர் அறிவித்தார். இதுபோன்ற அப்துல் கலாமின் சாதனைகளால், உலக நாடுகள் நம்மை மிரட்டுவதை விட்டு விட்டு, வர்த்தகம் செய்ய முன் வந்தன. 
 இந்தியாவை 2020-இல் வல்லரசாக மாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு லட்சம் மாணவர்களைச் சந்தித்து, அவர்களிடம் இதை விதைக்க கலாம் புறப்பட்டார். அடுத்த 20 ஆண்டுகளில் ஆட்சிகள் பல முறை மாறியிருக்கக் கூடும். ஆனால், இப்போது நான் சந்திக்கும் மாணவர்கள், வளரும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களைச் சந்தித்தால் அவர்கள் நாளைய இந்தியாவை உருவாக்கும் சிற்பியாக இருப்பார்கள் என்று கூறி 6 மாதத்தில் ஒரு லட்சம் மாணவர்களைச் சந்தித்துப் பேசினார்.
 இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியை ஏற்ற பின்பும் மாணவர்களைச் சந்தித்து ஊக்கப்படுத்துவதை அப்துல் கலாம் விடவில்லை. உலகில் இரண்டரைக் கோடி மாணவர்களைச் சந்தித்து உரையாடி, உறுதிமொழி எடுக்கச் செய்தவர் கலாம் மட்டுமே.
 அவர் இறந்த காலம் குறித்து சிந்திக்கவில்லை; எதிர்காலம் குறித்து சிந்தித்தார். கலாம் வரலாறு மட்டுமல்ல, இந்திய மாணவர்களின் எதிர்காலம்.
 இந்தியா எரிசக்தி சுதந்திரம் பெற்ற நாடாக 2030-இல் மாற வேண்டும் என அப்துல் கலாம் விரும்பினார். சூரியச் சக்தியைப் பெற்று எரிசக்தியாக அதை எப்படி பயன்படுத்துவது என்ற திட்டம் வகுத்தார்.
 இந்தியா மட்டுமல்லாது, உலக நாடுகள் ஒன்றிணைத்து இந்தத் திட்டத்தை 2050-க்குள் சாத்தியப்படுத்த முடியும் என்று அவர் நம்பினார். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் 8 மணி நேர சூரிய ஒளியைக் கொண்டு ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு 24 மணி நேரத்துக்கு மின்சாரம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் சிறப்பை உணர்ந்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் இந்தத் திட்டத்தை கலாம் பெயரில் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. 
 இளைஞர்கள் எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும், அந்தத் துறையில் தலைமைப் பண்பைப் பெற வேண்டும் என்பது கலாமின் கனவு. நான் அடுத்தவர்களுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய முடியும் என்று சிந்திக்கிற பக்குவத்தை இளைஞர்கள் பெறும்போதுதான், இந்தியா வெல்லும் என்று கலாம் நம்பினார். 
 பிறப்பு நிகழ்வாக இருக்கலாம்; வாழ்வு சரித்திரமாக இருக்க வேண்டும் என்ற கலாமின் லட்சியத்தை இளைஞர்கள் மனதில் கொள்ள வேண்டும் என்றார் பொன்ராஜ்.
 இந்த நிகழ்ச்சியில், 100 சிறந்த இளம் அறிவியலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டப்பட்டனர்.
 
 



No comments:

Post a Comment